நிலத்தடி நீரை ஆய்வு செய்ய நிபுணத்துவ குழுவில் புவியியலாளர்கள் இருவர் நியமனம் - அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக சிலர் பொய் பிரசாரம், அதில் எந்த உண்மையும் கிடையாது என்கிறார் அமைச்சர் அமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

நிலத்தடி நீரை ஆய்வு செய்ய நிபுணத்துவ குழுவில் புவியியலாளர்கள் இருவர் நியமனம் - அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக சிலர் பொய் பிரசாரம், அதில் எந்த உண்மையும் கிடையாது என்கிறார் அமைச்சர் அமரவீர

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் நபர்களில் சடலங்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் ஆராயும் சுகாதாரத் துறை நிபுணர்கள் குழுவுக்கு சுற்றாடல் அமைச்சின் இரண்டு புவியியலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேற்படி மரணங்களை அடக்கம் செய்யும்போது நிலத்தடி நீருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கங்களை வழங்குவதற்காகவே அவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பது அரசாங்கம் அல்ல.

அதற்காகவே சுகாதார அமைச்சு சுகாதாரத்துறை நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. அவர்களில் பரிந்துரைக்கமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

எனினும் சில அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் இல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்குவது போன்றதாக அமைந்துள்ளது.

கொரோனா என்பது ஒரு வைரஸ் தொற்று என்பதால் சாதாரணமாக சடலங்களை அடக்கம் பண்ணுவது போன்று அதனை மேற்கொள்ள முடியாது. சடலங்களில் இருந்து வைரஸ் பரவும் சூழல் காணப்படுவதால்தான் துறை சார்ந்த நிபுணர்கள் அந்த சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இது தொடர்பான தீர்மானங்களை இன, மத ரீதியில் மேற்கொள்ள முடியாது. சுகாதாரத்துறை நிபுணர் குழுவின் தீர்மானத்திற்கு இணங்கவே முடிவுகள் எட்டப்படும் அதனை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதன்போது கொரோனா வைரஸ் மரணங்களின் போதான சடலங்களை அடக்கம் செய்யும்போது அது நிலத்தடி நீரை பாதிப்பதுடன் அதன் ஊடாக மீண்டும் வைரஸ் தொற்று மனிதருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் சுற்றாடல் அமைச்சு புவியியலாளர்கள் இருவரை மேற்படி குழுவுக்கு நியமிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சு இருவரை நியமித்துள்ளது.

அவ்வாறான சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிலர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதில் எந்த உண்மையும் கிடையாது.

இப்போதும் அத்தகைய சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. சுகாதார அமைச்சின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே நடைமுறையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment