ஏறாவூர் நகர சபையின் திருத்தங்களுடனான வரவு செலவுத் திட்ட அமர்வும் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது, நகர சபைத் தலைவர் வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

ஏறாவூர் நகர சபையின் திருத்தங்களுடனான வரவு செலவுத் திட்ட அமர்வும் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது, நகர சபைத் தலைவர் வெளியேற்றம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் திருத்தங்களுடனான 2வது வரவு செலவுத் திட்டமும் சபையில் நகர சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் சபை அமர்வு கூச்சல் குழப்பத்தில் முடிவடைந்தது.

வருட இறுதி நாளான வியாழக்கிழமை 31.11.2020 காலை 10 மணிக்கு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் சபையின் இவ்வாண்டுக்கான இறுதி விசேட அமர்வும் திருத்தங்களுடனான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பும் நகரசபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருத்தங்களுடான மறு வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் திருத்தங்களுடனான அறிக்கையை நகர சபைத் தலைவர் வாசித்து முடித்ததும் உடனடியாக சபையை விட்டு வெளியேறினார்.

இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது. நகர சபைத் தலைவர் சபையை விட்டு நகர்ந்ததும் அங்கு கூடிய எதிர்ப்பாளர்களான நகர சபை உறுப்பினர்கள் 12 பேரும் தாங்கள் இந்த திருத்தங்களுடனான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் இத்துடன் நகர சபைத் தலைவரின் பதவி இயல்பாகவே வறிதாகின்றது என்றும் தெரிவித்தனர்.

எனினும் சபை அமர்வை விட்டு வெளியேறி நகர சபைத் தலைவரின் அலுவலகத்திற்கு வந்தமர்ந்த நகர சபைத் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இந்த வரவு செலவுத் திட்டம் சபையின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஒக்ரோபெரில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment