திங்கட்கிழமைக்குள் தீர்வில்லையாயின் செவ்வாய்க்கிழமை விரட்டியடிப்போம் - முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

திங்கட்கிழமைக்குள் தீர்வில்லையாயின் செவ்வாய்க்கிழமை விரட்டியடிப்போம் - முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியடிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு மீனவர்கள் 25 படகுகளுக்கு மேல் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.

இவர்களுடன் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இதனையறிந்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கடற்கரைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அரச அதிகாரிகள், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மீனவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இதன்போது, திங்கட்கிழமைக்குள் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவ்வாறு இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரத் தவறினால், மறுநாள் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், போராட்டத்தினைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் சென்று இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக மேலதிக அரச அதிபர் கூறுகையில், இது இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. எனவே இப்பிரச்சினைக்கு இராஜதந்திர வழியிலேயே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக இரு நாட்டு மீனவர்களும் நேரடியாக மோதிக் கொள்வது மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதாக அமையும்.

ஆகவே இப்பிரச்சினை தொடர்பில் மாவட்ட செயலர் க.விமலநாதன் ஊடாக வட மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்குத் தெரியப்படுத்தி உரிய தீர்வினைப் பெற்றுத் தருகின்றோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடற்கரையிலிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாங்குளம் நிருபர், விஜயரத்தினம் சரவணன்

No comments:

Post a Comment