மஹர சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு இடையூறுகள் மேற்கொள்ளப்படுகின்றன - சட்டத்தரணி சேனக பெரேரா - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

மஹர சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு இடையூறுகள் மேற்கொள்ளப்படுகின்றன - சட்டத்தரணி சேனக பெரேரா

(நா.தனுஜா)
 
மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு இடையூறை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன என்று சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா விசனம் வெளியிட்டிருக்கிறார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது மஹர சிறைச்சாலையில் நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் 11 கைதிகள் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் காயமடைந்திருக்கிறனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றோம்.

அண்மைக் காலத்தில் இதனை மூடிமறைக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சர்கள் கூட, குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆகையினாலேயே உயிரிழந்தவர்களை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நாம் வலியுறுத்தினோம். அந்த வகையில் இதுவரையில் பிரேதப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட எட்டுப் பேரும் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகவே உயிரிழந்திருக்கிறார்கள். எனினும் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இச்சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிராகப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதி, 'பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜராவதற்கு என்ன உரிமை இருக்கின்றது?' என்று கேள்வி எழுப்புகின்றார். அவர் இவ்வாறு கேள்வி எழுப்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்பில் ஆஜராகுமாறு சத்தியக் கடதாசி மூலம் எமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் அரச தரப்பு சட்டத்தரணி இவ்வாறு கேள்வி எழுப்புவது, இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்கு ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment