3 குழந்தைகளின் தாய் கொலை, உரப்பைக்குள் சடலம் மீட்பு - மழைக்கு ஒதுங்குமாறு தெரிவித்து பலாத்கார முயற்சி - திருமணமாகாத 30 வயது இளைஞன் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

3 குழந்தைகளின் தாய் கொலை, உரப்பைக்குள் சடலம் மீட்பு - மழைக்கு ஒதுங்குமாறு தெரிவித்து பலாத்கார முயற்சி - திருமணமாகாத 30 வயது இளைஞன் கைது

மூன்று குழந்தைகளின் தாயை கோடரியால் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் திருமணமாகாத 30 வயது இளைஞர் ஒருவரை வத்துகாமம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்லை, கடகொல்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 3 குழந்தைகளின் தாயான தமயந்தி பிரியங்கா (48) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் தனது ஊரிலுள்ள சங்கமொன்றின் கூட்டத்துக்கு சமூகமளிக்க சென்றுள்ளார். 

அன்றையதினம் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததனால், குறித்த பெண்ணை மழை குறையும் வரை வீட்டிற்கு வரும்படி சந்தேகநபர் அழைத்துள்ளார். இந்நிலையில் தனக்கு அறிமுகமானவர் என்பதனால், அவரது கோரிக்கையை ஏற்று குறித்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது சந்தேகநபர் அப்பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேற்படி மூன்று குழந்தைகளின் தாயைக் கொலை செய்த சந்தேகநபர், சடலத்தை உரப்பையொன்றில் கட்டி, அன்றிரவே தனது சொந்த முச்சக்கர வண்டியில் தனது வீட்டிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள பாபர்வத்தை எனும் காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

மனைவி காணாமல் போனது குறித்து, அவரது கணவர் என். சுனில் (56 ) வத்துகாமம் பொலிசில் வழங்கிய முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது கொலை தொடர்பான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

சந்தேகநபரை விசாரித்த பின்னர் சடலம் நேற்று (24) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய நீதவான் சரத் பிரேமகுமார நேற்று (24) கள விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவினது ஆலோசனையின் பேரில் வத்துகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த இளங்கன்சேகர தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment