மாட்டினை களவாடி இறைச்சிக்காக வெட்டி கன்றை காட்டுப் பகுதியில் வீசியெறிந்த கொடுமை! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

மாட்டினை களவாடி இறைச்சிக்காக வெட்டி கன்றை காட்டுப் பகுதியில் வீசியெறிந்த கொடுமை!

வவுனியா பனிக்கர் புளியங்குளம் பகுதியில் விதவைத் தாய் ஒருவரினால் பராமரிக்கப்பட்டு வந்த கன்று ஈனும் நிலையில் இருந்த பசு ஒன்று சமூக விரோதிகளால் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.

பனிக்கர் புளியங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிகாக வெட்டப்பட்டு மான் மற்றும் மரை இறைச்சி என விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் (25) கன்று ஈனும் நிலையில் காணப்பட்ட பசு ஒன்றினை களவாடியவர்கள் அதனை பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதுடன் அதன் வயிற்றில் காணப்பட்ட கன்றினையும் அப்பகுதியில் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

வவுனியாவில் பரவலாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் பனிக்கர் புளியங்குளம் பகுதியில் விதவைத் தாய் ஒருவரினால் அவர்களது வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வந்த பசுவே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண்ணின் இரண்டாவது பசு மாடும் குறிப்பிட்ட சில நாட்களில் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கிராமத்தவர்கள் தமது கிராமத்தில் வசிக்கும் சிலருடன் வெளிநபர்களும் இணைந்தே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஓமந்தை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிப்பதுடன் மாடு வெட்டப்பட்ட பகுதியையோ கன்று வீசப்பட்டு காணப்பட்ட பகுதியையோ காவல்துறையினர் நேரடியாக சென்று பார்வையிடவில்லை எனவும் அப்பகுதி இளைஞர்களிடம் தமது தொலைபேசியை கொடுத்து புகைப்படம் எடுத்துவருமாறு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

வவுனியா தீபன்

No comments:

Post a Comment