(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ, எரிபொருள் விசிறப்பட்டோ அல்லது மின்சாரக் கசிவினாலோ தீ பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த 15 ஆம் திகதி மாலை திடீர் தீ பரவல் ஏற்பட்டது. அந்த தீயானது இரு மணி நேரத்துக்குள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
தீயானது நீதிமன்றின், தேவையற்ற, அகற்றப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலேயே பரவியுள்ளமை பின்னர் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
இதனிடையே தீ பரவிய தினம் மாலை நேரமும் அடுத்த நாளும் இலத்திரனியல் பொறியியல் துறை நிபுணர் ஒருவரும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஜயமான்ன, சிரேஷ்ட உதவி பகுப்பாய்வாளர் பெர்னாண்டோ ஆகியோரும் தீ பரவிய உயர் நீதிமன்றின் பகுதியை பகுப்பாய்வு செய்தனர்.
அவர்களின் நிபுணத்துவ அறிக்கை பிரகாரமே தீ பரவலுக்கு மின்சாரக் கசிவோ, எரிபொருள் விசிறலோ காரணம் அல்ல என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த தீ பரவல் குறித்து சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 3 சிறப்புக் குழுக்கள் விசாரணைகளை நடாத்தி வருகிறது.
இந்த விசாரணைகளில், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள் சிலர் தேவையற்ற, அகற்றப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில், இரகசியமான முறையில் மறைந்திருந்து சிகரெட் புகைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டினாலேயே உயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் தீ பரவியதாக கூறப்படும் விடயத்தையும் முற்றாக மறுதலிக்க முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
இதுவரையான விசாரணகைளின் முன்னேற்றம் மற்றும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது.
சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
No comments:
Post a Comment