(எம்.மனோசித்ரா)
சர்வதேச ரீதியில் காணப்படும் கொவிட் தடுப்பூசிகளில் இலங்கைக்கு பொருத்தமானது எது என்பதை 2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு பொறுத்தமான கொரோனா தடுப்பூசி எது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவினால் தற்போதும் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த குழுவினால் உலகில் காணப்படும் சகல கொவிட் தடுப்பூசிகள் தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றில் இலங்கைக்கு எது பொறுத்தமானது என தீர்மானிக்கப்படும்.
தடுப்பூசி தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் எவ்வகையான தடுப்பூசியை பெற்றுக் கொள்வது, எந்தளவில் பெற்றுக் கொள்வது, எந்தெந்த வயது பிரிவினருக்கு அதனை வழங்குவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment