கொரோனா வைரஸின் வேகமாகப் பரவக்கூடிய புதிய திரிபு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென்னாபிரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகளின்படி, வீட்டில் மற்றும் வெளியில் ஒன்றுகூடல்கள் தடை செய்யப்பட்டிருப்பதோடு இரவு 9 தொடக்கம் காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ, பாதுகாப்பு அவசர சேவை உட்பட ஊழியர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
‘தற்போதில் இருந்து பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். பொது இடத்தில் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் துணியாலான முகக்கவசம் அணியாதவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும்’ என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா தொலைக்காட்சியில் அறிவித்தார்.
தென்னாபிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று சம்பவங்கள் ஒரு மில்லியனைத் தாண்டியதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்தது.
இதுவரை அந்நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மரபு மாற்றம் ஒன்றை தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் நிலையில் அந்நாட்டில் நோய்த் தொற்று வேகம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment