மக்ரோனிடமிருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - துருக்கி ஜனாதிபதி எர்துகன் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

மக்ரோனிடமிருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - துருக்கி ஜனாதிபதி எர்துகன்

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் (Emmanuel Macron) தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகன் (Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.

சார்லி ஹேப்டோ கேலிச் சித்திரம் தொடங்கி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பாரிஸ் நகரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி வரை பல்வேறு விவகாரங்களில் பிரான்சுக்கும் துருக்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் கடல் எல்லையில் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு துருக்கி ஆராய்சி கப்பல்கள் கிரீஸ் கடல்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் கிரீஸ் அரசுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது.

அர்மீனியா - அசர்பைஜான் மோதலில் பிரான்சுக்கு எதிரான நிலைப்பாட்டை துருக்கி எடுத்தது. மேலும், சாமுவேல் பெடி படுகொலையையடுத்து பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய மதவழிபாட்டு தளங்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. 

இதில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக பல இஸ்லாமிய வழிபாட்டு தளங்களின் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இந்த அடுக்கடுக்கான விவகாரங்கள் பிரான்ஸ் - துருக்கி இடையேயான உறவை முற்றிலும் மோசமடைய செய்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மீது துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகன் தனி நபர் தாக்குதல்களையும் அரங்கேற்றி வந்தார். 

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கூறி ரிசப் தையிப் எர்துகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

இந்நிலையில், இமானுவல் மக்ரோனிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புவதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகன் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகன் கூறியதாவது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது.

இமானுவல் மக்ரோனின் பிரச்சினையில் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நான் நம்புகிறேன் என்றார்.

இமானுவல் மக்ரோன் மீதான ரிசப் தையிப் எர்துகனின் கருத்து பிரான்ஸ் - துருக்கி இடையேயான உறவை மிகவும் மோசமடையச் செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment