தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட நீண்ட காலம் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திகதியொன்றை கோரவுள்ளதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை அமையவுள்ள நிலையில் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டவரென்ற ரீதியில் நீதியமைச்சர் அலி சப்ரியையும் இணைத்துக் கொண்டு அல்லது அவரது தலைமையில் ஆளும் கட்சியின் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நீதியமைச்சர் அலி சப்ரியை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அதன்போது நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் நீதி அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை ஒன்றையும் விடுத்தனர்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், காதர் மஸ்தான் ஆகியோர் அடங்கிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே நீதி அமைச்சரைச் சந்தித்து மேற்படி மகஜரைக் கையளித்துள்ளனர்.
அதன்போது அவர்கள் நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அதற்கிணங்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியை சந்திப்பதற்கும் அந்த சந்திப்பின்போது சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சரையும் இணைத்துக்கொண்டு அந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்வது தொடர்பிலும் நீதி அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தனர்.
தமது மேற்படி ஆலோசனையை நீதியமைச்சர் ஏற்றுக் கொண்டதாகவும் அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக அங்கஜன் இராமநாதன் எம்.பி தெரிவித்தார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அது தொடர்பில் எழுத்து மூலமான ஆலோசனைகளை முன்வைக்குமாறும் அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதியிடம் திகதி ஒன்றை ஒதுக்கித் தருமாறு கோரவுள்ளதாகவும் திகதி ஒன்று கிடைத்ததும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment