பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - உங்கள் துறையில் உங்களை வளர்த்துக் கொள்வதும், அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் : பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - உங்கள் துறையில் உங்களை வளர்த்துக் கொள்வதும், அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் : பாதுகாப்புச் செயலாளர்

நீங்கள் இணைந்து கொண்டுள்ள இந்த துறையில் உங்களின் திறன்களை அதிகரித்துக் கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். 

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும் நாட்டினுடைய பாதுகாப்பிற்காக பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்கின்றது. எனவே, பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் இந்த நிதிக்காக பொறுப்புடன் செயலாற்றுவர்களாக நாம் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

திருகோணமலையிலுள்ள கடற்படையின் பெருமைமிகு கடற்படை பயிற்சி கலாசாலையில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு கடற்படையின் கொமிஷன் அதிகாரிகளாக வெளியேறும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் (12) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

கிழக்கின் துறைமுக நகரான திருகோணமலையிலுள்ள கடற்படையின் கற்றல் தளத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வரவேற்றதுடன் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை பயிற்சி கலாசாலையின் கட்டளைத் தளபதி கொமடோர் தம்மிக குமார ஆகியோர் இந்த மரியாதை அணிவகுப்பில் பிரதம அதிதியுடன் பங்கேற்றனர்.

சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35ஆவது ஆட்சேர்ப்பு மற்றும் கடற்படை பயிற்சி கலாசாலையின் 61ஆவது ஆட்சேர்ப்புகளைச் சேர்ந்த 62 அதிகாரிகளே கொமிஷன் அதிகாரிகளாக வெளியேறினர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலக்கழகத்தைச் சேர்ந்த மிட்சிப்மன் ஏ.கே.எஸ். பெரேரா மற்றும் கடற்படை பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த மிட்சிப்மன் கே.வி.ஆர் கருணாரட்ன ஆகியோர் ஒவ்வொரு ஆட்சேர்ப்புக் குழுவிலும் பயிற்சி மற்றும் சகல துறை திறமைக்காக வழங்கப்படும் கௌரவ வாளை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மிட்சிப்மன் ஏ.எச்.ஜி.சி.டி. சில்வா மற்றும் மிட்சிப்மன் ஆர்.பி.எல். டி. சில்வா கடற்படை பயிற்சி கல்லூரி ஆட்சேர்ப்பு குழுக்களில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த புள்ளி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதுடன் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் மிட்சிப்மன் ஏ.எச்.ரி.ரி. தாருக மற்றும் மிட்சிப்மன் இமேஷக ஆகியோர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு குழுக்களில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த புள்ளி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதுடன் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, மிட்சிப்மன் பி.வீ. குலசிங்ஹ கடல்சார் பாட விடயங்கள், துறைசார் விடயங்கள் உட்பட சகல விடயங்களிலும் திறமைகளை வெளிக்காண்பித்து அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொண்டமைக்காக கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதிகாரிகளின் பிரியாவிடை நிகழ்வானது கடற்படை பயிற்சி கல்லூரியின் வருடாந்த கலண்டரில் மிக முக்கியமான நிகழ்வாகும். பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அதிகாரிகளின் பிரியாவிடை வைபவமானது கடற் பாரம்பரியத்திற்கு அமைய நடைப்பெறும் மிகப் பிரமாண்ட வைபவமாகும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி அல்லது அவரினால் பெயரிடப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்.

நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் புதிதாக வெளியேறும் இளம் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு பரிமாணங்களில் காணப்படும் மற்றும் பாரபரியமற்ற அச்சுறுத்தல்களிலிருந்து தாய் நாட்டை பாதுகாப்பது மாத்திரம் தங்களது பொறுப்பல்ல அதற்கும் அப்பால் சமூகத்தில் அமைதி மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் உங்களது பொறுப்பாகும் என்றார்.

தேசத்துடனான உங்களது விசுவாசம், நம்பிக்கை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது. உங்களுக்கு சிவில் சட்ட விதிமுறைகளுக்கு மேலதிகமாக கடற்படை சட்ட என்ற ஒன்று உள்ளது. எனவே, சிவில் சட்டத்திற்கு மேலதிகமாக அதனையும் மதிக்க வேண்டும்.

உலகளாவிய தவறான புரிதல்களால் தீவிரவாதம் மற்றும் தீவிரபோக்கு போன்ற பாரம்பரியமற்ற சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு கடற்படையிடமிருந்து அதேயளவிலான அல்லது அதனைவிட அதிக அளவிலான பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, மேற்குறிப்பிட்ட சவால்களையே அண்மைக்காலமாக நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய் நாட்டினை பாதுகாப்பது தொடர்பில் கடற்படையின் கடமை உணர்வு பற்றி விபரித்த பாதுகாப்புச் செயலாளர். நாடொன்றின் ஆயுதப் படையானருக்கே எந்தவொரு அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் சவால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அது நிலத்தால், கடற்பரப்பால் மற்றும் வான் பரப்பால் வரக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். விஷேடமாக நாட்டையும் அதனை சூழவுமுள்ள கடற்பரப்பை பாதுகாக்கும் பொறுப்பு கடற்படையைச் சார்ந்தது என்றார்.

இலங்கை கடற்படை சுமார் 70 ஆண்டுகளாக தாய் நாட்டிற்காக ஆற்றிவரும் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், மிலேச்சதனமான பயங்கரவாதத்திற்கு எதிராக மூன்று சதாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது அச்சத்திற்கு மத்தியிலும் எதிரிக்கு எதிராக நேருக்குநேர் போராடி நாட்டின் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆற்றிய சேவை மிகவும் பாராட்டுக்குறியதும் என்றென்றும் மதிக்கக் கூடிய ஒன்றாகும் என்றார்.

தாய் நாட்டின் நாளைய விடியலுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களை நினைவு கூர்ந்த அவர், அவர்கள் தாய் நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் இன்றும், நாளையும் எப்போதும் ஒரு மரியாதைக்குரிய விடயமாக அமையும் என தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் இடம்பெற்ற கடினமான சூழ்நிலையை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், தேசத்தின் அபிலாஷகளை அடைவதற்கு இளைஞர்கள் அர்ப்பணிப்பு பற்றி சிந்திக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.

நேர்மை, நிபுணத்துவம் மற்றும் அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவை தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்வதில் பொதிந்துள்ள நெறிமுறைகள் எனவும், இராணுவ தலைமைத்துவத்தில் இவைகள் உள்ளடக்கியதாக உங்கள் தன்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"இராணுவத்தில் தலைமை பொறுப்பை வகிப்பவர் எப்போதுமே தனது குணாதிசயத்தினுள் அடுத்தவர் இடத்தில் தன்னை வைத்து பார்க்கும் தன்மையையும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் எடுத்துக்காட்டான தலைமைத்துவத்தை கொண்டவராக விளங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

எதிரியியை வெற்றி கொள்வது அல்லது எதிரியினால் தோற்கடிக்கபடுவது எனும் செயற்பாடு , கடற்படை அதிகாரிகளும் வீரர்களும் ஒரே தளத்தில் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம் கிடைக்கப் பெறுவதனால் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் போர்கள் ஏனைய போர்களில் இருந்து வேறுபடுகின்றன என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், "கப்பலின் கட்டளை அதிகாரிகள், தங்களின் கீழ் உள்ள ஒவ்வொரு படைவீரர்களின் தனித்துவமான அறிவையும் திறனையும் பலவீனங்களையும் தனித்தனியாக அறிந்திருக்க வேண்டும். இவைகள் சரியாக அறிந்துகொள்ளப்படாமல் இருக்குமானால் அது அழிவுக்கு வழிவகுக்கும்" என அவர் தெரிவித்ததுடன் உங்களுக்கு கீழ் உள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் எண்ணங்களை அறிந்து செயற்படுவதே எவராலும் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மரியாதைக்குரிய சிறந்த தலைவனாக அவர்கள் மத்தியில் உங்களை மிளிரவைக்கும்" என தெரிவித்தார்.

"உங்கள் திறனை பலப்படுத்தும் பணிகளில் பின் நிற்கக் கூடாது எனவும் உங்கள் திறனை வெளிக்கொணர்வதற்கு ஆர்வத்துடன் செயற்படவேண்டும்" எனவும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர். "உங்கள் திறமை மற்றும் தொழில்முறையை மேம்படுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கனகச்சிதமாக பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினை நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் பரிணமிப்பதற்காக அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட பாரிய கப்பல் மற்றும் அதனோடு இணைந்த நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், "நாட்டிற்கு சொந்தமான கடல் வளத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய குறித்து கப்பல்களுக்கு கட்டளையிடும் கட்டளை அதிகாரிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த வளத்தின் மூலம் உச்ச பயனை பெற்றுக் கொள்ள அது தொடர்பாக அவர்கள் சிறந்த தொழில்முறை தகுதியினை கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த இளம் அதிகாரிகளை, சிறந்த ஆளுமை உள்ள படை அதிகாரிகளாக உருவாக்குவதற்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும், நாட்டிற்கு சொந்தமான கடற் பிராந்தியத்தை பாதுகாக்கத் தேவையான தொழில்சார் திறன்களை அவர்களுக்கு அளித்துள்ளதற்காகவும் கடற்படைத் தளபதி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 

பாதுகாப்பு அமைச்சின் சேவா வணிதா பிரிவு தலைவி திருமதி சித்ரானி குணரட்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாதுகாப்பு) திரு.பிபீஎஸ்வி நோனிஸ், இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீர, திருகோணமலை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment