(எம்.எப்.எம்.பஸீர்)
மஹர சிறைச்சாலை சம்பவத்தை படுகொலை சம்பவமாகவே பார்ப்பதாக கூறும் சி.பி.ஆர்.பி. எனப்படும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு, அது தொடர்பில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் ராஜகிரிய பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்திய சி.பி.ஆர்.பி. தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளிட்டோர் இதனை அறிவித்தனர்.
மஹர சிறையில் கைதிகள் கொல்லப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சேனக பெரேரா, கைதிகளின் கோரிக்கை நியாயமானது எனவும், உரிமைகளை கோரும் போது, நிராயுதபானிகளான கைதிகள் மீது தோட்டாக்களால் பதிலளிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தொடர்ச்சியான சித்திரவதைகள், கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன. 1983 வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள், களுத்துறை, அனுராதபுர சிறைகளில் இடம்பெற்ற கொலைகள் என அந்த பட்டியல் நீண்டது.
எனினும் 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மட்டுமே குறைந்த பட்சம் ஒரு வழக்கேனும் உள்ளது. மற்றயவை அனைத்துக்கும் எந்த நியாயமும் வழங்கப்படவில்லை. நேற்று முன்தினம் மஹர சிறையில் இடம்பெற்ற சம்பவத்தை பாருங்கள். சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட பதில் என்ன?
கொவிட் நிலைமை காரணமாக வெளியே இருக்கும் எங்களுக்கு எவ்வளவு அச்சம் உள்ளது. ஒரு மீட்டர் சமூக இடைவெளியை விடுத்து, ஒரு சென்றி மீற்றர் சமூக இடைவெளியைக் கூட பேண முடியாமல் மஹர கைதிகள் இருந்தனர். அவர்களில் அதிகமானோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டது என்பதை அறிந்ததும் அவர்கள், தங்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தோட்டாக்களால் பதிலளித்துவிட்டு, தப்பியோட முயன்றதாக கதை கட்டுகின்றனர். வரலாற்றில் நடந்த அனைத்து சிறை கைதிகளின் கொலைகளின் போதும் இதே கதையே கூறப்பட்டுள்ளன. இது நம்ப முடியுமானதாக இல்லை. சட்டத்தை மதிக்கும் நாம் எப்படி இந்த கதைகளை நம்புவது. இது கைதிகளுடன் முடிவடையாது.
இன்று கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை வெளியில் உள்ள உரிமைகளை கோரும் எமக்கு ஏற்படலாம். இலங்கை சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச இணக்கப்பாடுகளில், சிறைக் கைதிகள் குறித்த இணக்கப்பாடுகளில் கையெழுத்திட்டுள்ள நாடு என்ற ரீதியில் இவ்வாறு செயற்பட முடியாது.
மஹர சம்பவத்துக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இது குறித்து நாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment