வைரஸ் கட்டுப்படுத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களுக்காவது தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் - இலங்கையின் பிம்பம் சர்வதேசத்தின் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளது எஞ்சியுள்ளவற்றையாவது பாதுகாக்கவும் : சம்பிக ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

வைரஸ் கட்டுப்படுத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ளவர்களுக்காவது தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் - இலங்கையின் பிம்பம் சர்வதேசத்தின் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளது எஞ்சியுள்ளவற்றையாவது பாதுகாக்கவும் : சம்பிக ரணவக்க

(எம்.மனோசித்ரா) 

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டாலும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்காவது பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதற்காக ஏனைய நாடுகள் அதிக முதலீட்டைச் செய்துள்ளன. வைரஸிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். இதுவே அடிப்படையாகும். அதற்கமைய சர்வதேச மட்டத்தில் சுமார் 11 தடுப்பூசிகள் தற்போது பரிசோதனை மட்டத்திலுள்ளன. சிலவற்றை தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இலங்கை எந்த இடத்திலுள்ளது ? ஏன் இவ்விடயத்தில் தலையிடாமல் உள்ளது ? சில ஊடகங்களில் தடுப்பூசிகள் தொடர்பில் அநாவசிய பீதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றன. அவ்வாறெனில் எவ்வகையான தடுப்பூசி இலங்கைக்கு பொறுத்தமானது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். 

ஆனால் இது தொடர்பில் எமது அரசாங்கத்திடம் எவ்வித முன்னாயத்தமும் இல்லை. எமக்கு அயல் நாடான இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

வைரஸ் பரவலில் முதலாம் கட்டத்தில் அதனை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் இரண்டாம் அலை ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவில்லை. மாறாக முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் எவ்வாறு இலாபம் பெறுவது என்பவற்றிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியது. 

அது மாத்திரமின்றி முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, வைத்தியர் ஜயருவான் பண்டார போன்றோர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள்.

எவ்வாறிருப்பினும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டாலும், வைரஸ் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதார சேவையினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என்பவர்களுக்கேனும் தடுப்பூசிகளை ஜனவரியில் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நடவடிக்கையை எடுப்பதற்கு பதிலாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தால், அந்த நேரத்தில் வைரஸ் பரவல் மேலும் தீவிரமடையுமே தவிர, குறைவடையாது.

உள்நாட்டில் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதனை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்காது போலியான பிரசாரங்களை முன்னெடுத்து மருந்துகளைப் பெறுவதற்காக மக்களை வரிசையில் காக்க வைக்க வேண்டாம். 

அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் என அனைத்து விடயங்களிலும் இலங்கையின் பிம்பம் சர்வதேசத்தின் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே எஞ்சியுள்ளவற்றையாவது வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசியை இலங்கையில் வைரஸ் கட்டுப்படுத்தலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment