(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹர சிறைச்சாலை கலவரத்தில் மரணித்தவர்களின் மரண விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும். மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் இதுவரை 11 பேர் மரணித்துள்ளனர். ஆனால் அவர்களின் பெயர் விபரங்களை இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர்.
மரணித்தவர்கள் யார் என அறிந்து கொள்ளும் உரிமை சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கு இருக்கின்றது. சம்பவத்தில் தங்களது பிள்ளையும் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இன்னும் சிறைச்சாலைக்கு அருகில் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
மேலும் மரணித்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் இதில் பாரிய சதித்திட்டம் இருக்க வேண்டும். சிறைச்சாலையில் இருந்தவர்களில் அதிகமானவர்கள் பிணை வழங்கப்பட்டவர்கள். கொவிட் காரணமாக அவர்கள் தொடர்ந்து அங்கே தங்க வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர்.
அத்துடன் மரணித்த 11 பேரில் 10 பேருக்கு கொவிட் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பரிசோதனை அறிக்கை இல்லை. கொரோனா என தெரிவித்து அனைவரையும் கொண்டுபோய் எரித்து விடுவார்கள். அதன் பின்னர் மரண விசாரணை தேவையில்லை.
11 பேருக்கும் அதிகமானவர்கள் மரணித்திருக்கும் என்றே சந்தேகிக்கின்றோம். இது பாரிய மனித உரிமை மீறலாகும். அதனால் மரணித்தவர்கள் அனைவரதும் மரண விசாரணை அறிக்கையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேசத்தின் கவனம் இது தொடர்பாக செலுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் இதனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment