(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு செய்து வரும் தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. 200 வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு சொந்தமாக வீடும் இல்லை மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானமும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு செய்து வரும் தோட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்த ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் அவர்கள் லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள்கூட இன்னும் செய்து கொடுக்கப்படாமல் இருக்கின்றது.
தற்போதுள்ள கொவிட் பிரச்சினையிலும் அந்த பிரதேசங்களுக்கு சென்று பார்த்தால் நாட்டில் கொவிட் இருக்கின்றதா என்ற நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. வைத்தியசாலைகளில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. விசேட வைத்தியர்கள் என யாரும் இல்லை.
1987 மாகாண சட்டத்தில் தோட்டங்கள் தொடர்பில் ஒன்றும் இருக்கவில்லை. அதனால் உள்ளூராட்சி, மாகாண சபைகள் தோட்டங்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் தேடிப்பார்க்கவில்லை. 2018 லே மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில் மாகாண நிறுவனங்களுக்கு தோட்டங்கள் உரித்தாகின. ஆனால் தேர்தல்களுக்கு அனைவரும் அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டனர்.
தற்போதும் இந்த அமைச்சின் நோக்கு மற்றும் இலக்குகள் தொடர்பிலான குறிப்பில் தோட்ட மக்கள் வாழ்வதற்கு வீடு மாத்திரம் அல்ல, அவர்கள் மரணித்தால் அடக்குவது தொடர்பாகவேனும் தெரிவிக்கப்படவில்லை. அந்த மக்களுக்கு என்று பொது மயானம் இன்றைக்கும் இல்லை. யாராவது மரணித்தால் தோட்டத்திலே ஒரு இடத்தில் அடக்குவார்கள்.
அதனால் 200 வருடங்களாக தோட்டங்கள் இருந்து வந்தாலும் எந்த அரசாங்கமும் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்கவும் இல்லை. அவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு தேவையான மயானப் பிச்சினையையும் இதுவரை தீர்க்கவில்லை.
அத்துடன் தோட்ட மக்களின் சம்பள பிரச்சினையும் இன்னும் அவ்வாறே இருந்து வருகின்றது. 200 வருடங்களாக அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து வந்தாலும் இன்னும் நாட் சம்பளத்துக்கே இருந்து வருகின்றனர்.
மாதச் சம்பளம் என்ற முறை அவர்களுக்கு இல்லை. ஆயிரம் ரூபா அதிகரித்து கொடுக்கப்படும் என கடந்த வருடம் தெரிவித்தார்கள், தற்போது ஜனவரியில் இருந்து வழங்குவதாக பிரதமர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அதனை எவ்வாறு வழங்குவதென்ற எந்த அறிவிப்பும் இல்லை.
தோட்ட கம்பனிகளும் இதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை. பொதுவாக கூட்டு ஒப்பந்தத்திலேயே சம்பள அதிகரிப்பு இடம்பெறுகின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதமே கூட்டு ஒப்பந்தம் இடம்பெற இருக்கின்றது. அதனால் சம்பள பிரச்சினையை சட்ட ரீதியில் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment