அரசாங்கத்திற்கு தீர்வை வழங்கக் கூடிய அதிகாரம் இருந்தும், தேர்தலுக்கு அஞ்சுகின்றமை தெளிவாகிறது - ரஞ்சத் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

அரசாங்கத்திற்கு தீர்வை வழங்கக் கூடிய அதிகாரம் இருந்தும், தேர்தலுக்கு அஞ்சுகின்றமை தெளிவாகிறது - ரஞ்சத் மத்தும பண்டார

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அவற்றை தீர்ப்பதற்கு ஏதுவான வகையில் மக்களால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அதனை காலம் தாழ்த்துவதிலிருந்து அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றமை தெளிவாகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சத் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாட்டில் மக்கள் மத்தியில் காணப்பட்ட வர்க்க வேறுபாட்டு பிரச்சினைக்கு வழங்கப்பட்ட தீர்வே மாகாண சபை முறைமையாகும். இது வரலாற்று ரீதியான மிகவும் முக்கியத்துவமுடைய விடயமொன்றாகும். இந்த பிரச்சினையின் காரணமாக நாட்டில் 30 வருட கால யுத்தம் நடைபெற்றது. எனினும் தற்போது அதற்கு தீர்வொன்று வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமை உருவாக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை வெளியிட்டவர்களே மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதில் அதிகாரத்தையும் கைப்பற்றியது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 13 ஆவது திருத்தம் அல்ல, 13 பிளஸ் (10) கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நிலைவரத்தை பார்க்கும் போது 13 பிளஸ் அல்ல. 13 ஆவது திருத்தம் கூட கிழித்தெரியப்பட்டு விடுமா என்று தோன்றுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் பற்றி பேசினாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். இதன் மூலம் உள்ளக பிரச்சினைகள் காணப்படுவதாகத் தோன்றுகிறது. 

பிரதமரின் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இல்லை. மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்தப்படுமா அல்லது இல்லாமலாக்கப்படுமா என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம். இதனை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் எல்லை நிர்ணய பிரச்சினை காணப்படுவதாக அரசாங்கம் கூறியது. தற்போது மக்களால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளது. அதனூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 

எனவே பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடிய அதிகாரம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் அதனை செய்யாதிருப்பதன் மூலம் தேர்தலுக்கு அஞ்சுகிறது என்பது தெளிவாகிறது என்றார்.

No comments:

Post a Comment