கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் கருக்கலைப்புக்கு கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. 

கர்ப்பத்தால் ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ அல்லது பலாத்காரத்தின் மூலம் அந்தப் பெண் கருவுற்றாலோ மட்டுமே அங்கு கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

எனவே அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் பலர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதேசமயம் கருக்கலைப்புக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க கூடாது என கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில், பெண்கள் கர்ப்பமாகிய 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதா நிறைவேறியது. 

தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 29 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. 

நேற்று (30) வாக்கெடுப்பு நடந்தபோது நாடாளுமன்றத்துக்கு வெளியே கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மசோதா நிறைவேற்றப்பட்டதும் கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment