ஜனாசா விவகாரத்தை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

ஜனாசா விவகாரத்தை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்பில் இரகசியமாக அரசாங்கம் மாலைதீவுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதனால் சர்வதேசமே இலங்கையைப் பார்த்து நகைக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர் அரசாங்கமே முறையான தீர்மானமொன்றை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், மரண சடங்குகள், திருமணங்கள் உள்ளிட்டவற்றுக்கு சட்ட விதிகளை விதித்துள்ள அரசாங்கம், 500 இற்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறெனில் இறப்பவர்கள் இறக்கட்டும், நாம் வாழ்வோம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் போக்கு காணப்படுகிறது. 

கொரோனா கட்டுப்பத்தலை மாத்தரமின்றி நாட்டின் நிர்வாகத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதன் காரணமாகவே ஒவ்வொரு வர்த்தகர்களும் அவரவர் நினைக்கும் விலைகளில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தொடர்பில் இன்னும் உரிய தீர்மானமொன்று வழங்கப்படவில்லை. ஆனால் இரகசியமான முறையில் இது குறித்து மாலைத்தீவுடன் பேசியிருக்கிறார்கள். அதனை அந்நாட்டு முக்கியஸ்தர்களே வெளிப்படுத்திவிட்டனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். 

இந்த பிரச்சினையை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளமை நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசம் எம்மை பார்த்து நகைக்கிறது. எவ்வாறிருப்பினும் சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு முன்னர் அரசாங்கமே முறையான தீர்மானமொன்றை வழங்க வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு இரத்தத்தை பார்க்காமல் இருக்க முடியாது. அதனால்தான் முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையைப் போன்று தற்போது மஹர சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நியாயமானது என்பது சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

No comments:

Post a Comment