(நா.தனுஜா)
அத்துரலியே ரத்ன தேரரை எங்கள் மக்கள் சக்தி தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிப்பது குறித்து கடதாசி மூலமான எவ்வித உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை. நிபந்தனைகள் எவையும் விதிக்கப்படவில்லை. மாறாக நம்பிக்கையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அதன்படி அத்துரலியே ரத்ன தேரர் 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ, அவர் விரும்பும் வரையில் பாராளுமன்றத்தில் இருக்க முடியும். அதுபற்றி எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பொதுபலசேனா அமைப்பினால் கொழும்பில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது பாராளுமன்றத்தில் எங்கள் மக்கள் சக்தியின் தேசியபட்டியல் ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் என்ன நேர்ந்தது என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். எமது கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் இது குறித்த தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் எமது நாட்டில் பௌத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாம் நிர்வாக ரீதியிலும், தீர்மானமெடுக்கும் அதிகாரங்களின் அடிப்படையிலும் அரசியல் ரீதியாகப் பலமடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தோம்.
அண்மைக் காலத்தில் பல்வேறு துறை சார்ந்தவர்களும் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் அனைவரும் நாடு குறித்து மறந்து போய்விட்டார்கள். பௌத்தர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் அறியாதிருக்கிறார்கள்.
ஆகவேதான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 2 அல்லது 3 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு, இது விடயத்தில் உரியவாறு செயலாற்றுவதற்குத் தீர்மானித்தோம். அதன்படி நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் அத்துரலியே ரத்ன தேரருடன் இந்த எங்கள் மக்கள் சக்தியில் இணைந்து கொண்டோம். இதன்போது நாம் எவ்வித உடன்படிக்கைகளையும் செய்துகொள்ளவில்லை. ஏனெனில், கட்சிகளுக்குத்தான் ஊடன்படிக்கைகள் அவசியமேயன்றி, மக்கள் இயக்கங்களுக்கு அது தேவையில்லை.
எனினும் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, துரதிஷ்டவசமாக பாராளுமன்றத்தில் ஒரு தேசியபட்டியல் ஆசனம் மாத்திரமே எமக்குக் கிடைத்தது. ஆனால் அது குறித்து உண்மையில் பிரச்சினை ஏற்படவில்லை. மாறாக செயலாளர் பதவி தொடர்பிலேயே சர்ச்சை ஏற்பட்டது. எங்கள் மக்கள் சக்தியின் செயலாளர் விமலதிஸ்ஸ தேரர் தனது பெயரை தேசியபட்டியல் ஆசனத்திற்காகப் பரிந்துரைத்து, தனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டார்.
இது குறித்து அத்துரலியே ரத்ன தேரரிடம் கூறியபோது, அவர் 'இவையனைத்தும் சரி. எதுவும் பேச வேண்டாம்' என்று பதிலளித்தார். பாராளுமன்றத்திற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சியில் உள்ள அனைவருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியமல்லவா? ஆனால் கட்சியின் செயலாளர் அதனைச் செய்யாமல், தன்னிச்சையாகவே தனது பெயரை முன்மொழிந்துவிட்டார். அதற்கான கடிதத்தை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு கோரியபோது, அவர் அதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார்.
அதன் பின்னர் பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து அத்துரலியே ரத்ன தேரர் குறைந்தபட்சம் 6 மாத காலமாவது பாராளுமன்றத்திற்குச் செல்வதற்குக் கோரியபோது விமலதிஸ்ஸ தேரர் ஏற்றுக் கொண்டாலும், கட்சியின் தலைவர் சமன் பெரேரா அதனை ஏற்கவில்லை. இறுதியில் நான் தலையிட்டு அத்துரலியே ரத்ன தேரருக்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தினேன்.
இறுதியில் அத்துரலியே ரத்ன தேரரை எங்கள் மக்கள் சக்தியில் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிப்பதற்குத் தீர்மானித்தோம். இது குறித்து கடதாசி மூலமான எவ்வித உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை. நிபந்தனைகள் எவையும் விதிக்கப்படவில்லை. மாறாக நம்பிக்கையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி அத்துரலியே ரத்ன தேரர் 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ, அவர் விரும்பும் வரையில் பாராளுமன்றத்தில் இருக்க முடியும். அதுபற்றி எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
நானும் பாராளுமன்றம் செல்வதற்கான அனுமதியைக் கோரினேன். எனினும் அதில் இணக்கப்பாடு எட்டப்படாமையால், தற்போது வேறு விதத்தில் இவ்விவகாரத்திற்கு சுமுகமாகத் தீர்வுகாண முடிந்திருக்கிறது.
எமக்கு யார் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் நபர்களைக் கருத்திற்கொள்வதில்லை. மாறாக நாம் எத்தகைய கொள்கையைக் கொண்டிருக்கிறோம்? சமூகத்திற்கு என்ன கருத்தைக் கூறுகின்றோம்? என்பது எமக்கு முக்கியமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment