பொதுப் போக்குவரத்தில் நின்றவாறு பயணிப்பதற்குத் தடை - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பொதுப் போக்குவரத்தில் நின்றவாறு பயணிப்பதற்குத் தடை

(செ.தேன்மொழி) 

பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பேரூந்துகளின் இருக்கையின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும். அதனையும் விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய, சுகாதார அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 

அதில் 97 ஆவது கூற்றுக்கமைய பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களின் பொறுப்புகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பொது போக்குவரத்து சாதனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அல்லது அந்த துறையை சார்ந்த உரிய அதிகாரிகளே அது சார்ந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொது போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பேரூந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும். 

இதன்போது பேரூந்துகளில் பயணிகள் எவரும் நின்றுக்கொண்டு பயணிக்க முடியாது. அவ்வாறு பயணிகளை நிறுத்திக் கொண்டு போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment