பாராளுமன்றத்தில் சார்ள்ஸ், சரத் வீரசேகர, மனோ கடும் தர்க்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

பாராளுமன்றத்தில் சார்ள்ஸ், சரத் வீரசேகர, மனோ கடும் தர்க்கம்

கார்த்திகை 29ஆம் திகதி ஆலயத்தில் தீபம் ஏற்றிய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் காரணமின்றி கைது செய்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறிய குற்றச்சாட்டை அமைச்சர் சரத் வீரசேகர நிராகரித்தமையால் சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் மனோ கணேசனுக்கு இடையில் நேற்று சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போது அவர், கார்த்திகை தீபம் ஏற்றும் தினத்தில் ஆயலங்களில் விளக்குகளை ஏற்றியவர்களுக்கு கடந்த 29ஆம் திகதி பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

இதன்போது எழுந்த அமைச்சர் சரத் வீரசேகர, நீங்கள் கூறுவது பொய்யாகும். அவ்வாறு எவ்வித தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்றார். 

அமைச்சருக்கு பதிலளித்த சாள்ஸ் எம்.பி., இல்லை இது உண்மையாகும். சுன்னாகம் பொலிஸாரால் கடந்த 29ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டு ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இதுபற்றி தெரியாதென கூறுவது வேடிக்கையாகும்.

இதன்போது கோபத்துடன் எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்து விவகார அமைச்சு எனது அமைச்சின் கீழ்தான் கடந்த காலத்தில் இருந்தது. இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் பொறுப்பு எனக்குள்ளது. சாள்ஸ் எம்.பி. சாதாரணமான ஒரு முறைப்பாட்டைதான் முன்வைக்கிறார்.

கார்த்திகை 29ஆம் திகதி விளக்கு ஏற்றும் நிகழ்வு இந்துக்களால் நடத்தப்படும். அதனையும் மாவீரர் தினத்தையும் நீங்கள் குழப்பிக் கொண்டுள்ளீர்கள். தயவுசெய்து வடக்கு, கிழக்கில் உள்ள டி.ஐ.ஜீக்களுக்கும் கட்டளைத் தளபதிகளுக்கும் இந்து மத விவகார அமைச்சின் ஊடாக மதக் கலண்டரை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்க வேண்டும்.

பொலிஸில் முறைப்பாடு ஒன்று உள்ளதாக சாள்ஸ் எம்.பி கூறியுள்ளார். இவ்வாறுதான் நாட்டில் உள்ள புரிந்து கொள்ளாமையை நாம் அகற்ற வேண்டும். இந்து மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் போதியளவு ஒற்றுமைகள் உள்ளன. அதனை நாம் செய்ய வேண்டும். 

இரண்டு தரப்பினரும் அடித்துக் கொள்வதால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. குழப்பிக் கொண்டுள்ளீர்கள். மாவீரர் தினத்தையும் இதனையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment