இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படும் - ஜே.சி.அலவத்துவல - News View

About Us

About Us

Breaking

Monday, December 21, 2020

இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படும் - ஜே.சி.அலவத்துவல

(எம்.மனோசித்ரா)

ஜெனீவா கூட்டத் தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படக் கூடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாடு பொருளாதார ரீதியிலும் ஏனைய துறைகளிலும் பாரிய வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் நிறைவேற்றதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் மனித உரிமைகள் மீறல்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு மீண்டும் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டால் மீண்டும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கப்படக் கூடும். 

இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும். தற்போதுள்ளதை விடவும் பெரும் வீழ்ச்சியடையும். நாட்டின் ஆட்சியாளர்களாலேயே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுள்ளது. இதனால் மக்கள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். 

வரலாற்றில் முதன் முறையாக தேங்காய் விலைக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எனினும் இவ்வாறு வெளியிடப்பட்ட எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பட்டது. 

இதனால் இலங்கைக்கு பல மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அவ்வாறிருந்த போதிலும் அதன் மூலமும் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இவ்வாறு வருமானத்தை குறைத்துக் கொண்டு அரசாங்கம் மக்களையும் ஏமாற்றி தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment