கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அவசரம் காட்ட மாட்டேன் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்தார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அவசரம் காட்ட மாட்டேன் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்தார்

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் அவசரம் காட்டமாட்டேன் என கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் தற்போதைக்கு தடுப்பூசி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக அமெரிக்காவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அந்த நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அங்கு 1 கோடியே 67 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அதேபோல் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அதேபோல் உயிரிழப்பும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. 

அதேவேளையில் கொரோனா பாதிப்பால் துவண்டு கிடக்கும் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நேற்று முதல் அங்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக 30 லட்சம் பேருக்கு செலுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது அமெரிக்க அரசு.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பலருக்கும் முதலாவதாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் உலியோட் “தேசிய பாதுகாப்பு தலைமையின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் பெறும் அதே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி தங்களுக்கும் கிடைக்கிறது என்ற நம்பிக்கை அமெரிக்க மக்களுக்கு இருக்க வேண்டும். தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதோடு, நமது தேசம் வளர்ச்சிக்கு மீண்டும் திரும்புவதற்காக நாம் தொடர்ந்து பணியாற்றி நமது குடிமக்களுக்கு, அமெரிக்க அரசு தடையின்றி, அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தொடரும் என்பதை மேலும் உறுதி செய்யும்” என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போதைக்குதான் தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்த ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முதலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்தார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிகாரிகள் சற்று பொறுத்திருந்து கொரோனா தடுப்பூசியைப் பெற வேண்டும். எனவே வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் கொரோனா தடுப்பூசிகளுக்கு அதிக காலம் காத்திருப்பார்கள். நானும் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் அவசரம் காட்டமாட்டேன். தற்போதைக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளப் போவதில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் அதை செய்ய எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்புக்கு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்ததும், வெள்ளை மாளிகையில் 10 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை கொரோனா வைரஸ் தாக்கியதும் நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment