(இராஜதுரை ஹஷான்)
5000 கிராமிய சிறு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தொகுதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருவதற்காக 'நீர்ப்பாசன சுபீட்சம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இரண்டு வருட துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள 50,000 வரையிலான சிறு குளங்கள், அணைக்கட்டு, நீர்ப்பாசனக் கால்வாய்த் தொகுதி, குளத் தொகுதிக் கட்டமைப்பு போன்றவற்றின் பராமரிப்புக்காக நிரந்தர நிதியின்மையால் அவற்றைப் பராமரித்தலில் பிரச்சினைகள் காணப்படுகின்றது.
அதனால் ஒவ்வொரு வருடமும் பருவமழைக் காலம் முடிவடையும் போது 1000 கிராமிய நீர்ப்பாசனத் தொகுதிகள் வரை சேதமடைந்து போவதால், நாடளாவிய ரீதியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளக் கூடிய 150,000 ஏக்கர்கள் தற்போது தரிசு வயல்களாக மாறியுள்ளமை அவதானிக்க முடிகிறது.
இந்நிலைமைக்குத் தீர்வுகாணும் வகையிலும், தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலின் கீழ் 5000 கிராமிய சிறு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தொகுதிகளை மீள் நிலைக்குக் கொண்டு வருவதற்காக 'நீர்ப்பாசன சுபீட்சம்' எனும் பெயரில் இரண்டு வருட துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், அரசாங்கத்திடமுள்ள மனித வளம் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, கிராமிய மட்டத்திலுள்ள சமயத் தலைவர்களின் தலைமையில், விவசாயிகள், பாடசாலைகள், இளைஞர்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இயன்றவரை கிராமிய விவசாயிகளிடம் நாளாந்தக் கொடுப்பனவு அடிப்படையில் தேவையான உழைப்பைப் பெற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி 1000 குளங்களை குறித்த வேலைத்திட்டத்துக்கு அமைய ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment