நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே அரசு முடிவு, மாலைதீவுக்கு சடலங்களை அனுப்பும் தீர்மானம் இல்லை என்கிறார் அமைச்சர் ரமேஷ் பதிரண - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே அரசு முடிவு, மாலைதீவுக்கு சடலங்களை அனுப்பும் தீர்மானம் இல்லை என்கிறார் அமைச்சர் ரமேஷ் பதிரண

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி கோரும் விடயத்தை மனிதாபிமான ரீதியில் சிந்தித்து மீளாய்வு செய்யுமாறு நிபுணர் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். 

மாலைதீவிற்கு சடலங்களை அனுப்புவது தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது.

கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், கொரோனாவினால் இறப்பவர்களின் விடயம் தொடர்பில் நிபுணர் குழுவின் ஆலோசனைகளிற்கமையதான் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. உயிரை அர்ப்பணித்து செயற்படும் சுகாதார பிரிவின் பங்களிப்பை ஒதுக்க முடியாது.

இறப்பவர்களை புதைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அமைச்சரவையிலும் இது தொடர்பாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையிலே இந்த கோரிக்கை தொடர்பாக மீளாய்வு செய்யுமாறு நிபுணர் குழுவிடம் கோரப்பட்டுள்ளது. குழுவின் முடிவு கிடைத்ததும் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

மாலைதீவிற்கு சடலங்களை அனுப்பும் விடயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொரோனாவினால் இறப்பவர்களின் சடலங்களை மாலைதீவிற்கு அனுப்புவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் கோரிககையும் முன்வைக்கவில்லை. சமூகவலைத்தளங்களிலே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment