புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - கவலை தெரிவித்தார் இரா.சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - கவலை தெரிவித்தார் இரா.சம்பந்தன்

(ஆர்.ராம்)

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்த வாரம் நிபுணர் குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்ற விடயத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கைகள் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான சூழலில் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த தருணத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் 13 ஆவது திருத்ததச் சட்ட ஏற்பாடுகளுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்ந்தளித்து இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை வழங்குவேன் என்று இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் செயலாளராக இருந்த யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருந்த தருணத்திலும் அவர் அவ்விதமான வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது எம்முடன் நடைபெற்ற சந்திப்புக்களின் போதும் அவ்விடயம் சம்பந்தமாக பேசியிருக்கின்றார்.

ஆகவே நாட்டின் இனப்பிரச்சினையொன்று இருக்கின்றது. தமிழ் மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக பாதுகாப்பாப அமைதியாக வாழுவதற்குரிய வகையிலான வழிவகைகள் அரசியலமைப்பு ரீதியாக மீளப்பெறாதவாறு, உறுதியானவாறு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்றுக்கொண்ட இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் அவர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார். அவருடைய சகோதரர் ஜனாதிபதியாக இருக்கிறார்.

தற்போது அவர்கள் புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவொன்றை நியமித்திருக்கின்றார்கள். அந்த குழு அனைத்து தரப்பினரிடத்திலும் கருத்துக்களை கோரியுள்ளது. அந்தக் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக நாம் கூட்டமைப்பாக எமது முன்மொழிவுகளை சமர்பிக்கவுள்ளோம். எதிர்வரும் வாரம் அந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதில் என்னுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கவுள்ளனர். அந்த முன்மொழிவுகள் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகாதவாறும் எமது மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

மேலும் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள அரசாங்கம் புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்கின்றமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அவை எமக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கவில்லை.

எனினும் நாம் எடுக்கப்படுகின்ற முயற்சிகளை முழுமையாக ஒதுக்காது நாங்களாகவே அந்தக் கருமத்தினை தவிர்த்தவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது எமது கடமைகளை முன்னெடுத்துள்ளோம். 

இந்த பணிகள் இதயசுத்தியுடன் இந்த நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு நியாயமான முறையில் இடம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment