(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுகட்டாயமாக தகனம் செய்யப்படுகிறது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தின் இத்தீர்மானம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் மத ரீதியான நம்பிக்கை மற்றும் உரிமை என்பவற்றைப் பாதிப்பதுடன் இது விடயத்தில் முன்வைக்கப்படும் விஞ்ஞான பூர்வமான முறைக்கும் எதிரானதாகக் காணப்படுகின்றது என்று அந்த கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வது கட்டாயமல்ல என்றும் அதனால் தொற்றுப் பரவல் ஏற்படலாம் என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எவையுமில்லை என்றும் உலக சுகாதார ஸ்தானம் தெரிவித்திருக்கும் நிலையிலும் கூட, இலங்கை அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.
எந்தவொரு அடிப்படைகளும் இல்லாத போதிலும் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான ஒரு உதாரணமாகவே நோக்கப்பட முடியும் என்றும் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே அரசாங்கம் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் அதேவேளை, இது விடயத்தில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment