ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் சட்டமானது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் சட்டமானது

ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்த மசோதாவுக்கு ராணி இரண்டாவது எலிசபெத் தனது ஒப்புதலை வழங்கி விட்டதால் அது சட்டமாகி உள்ளது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பிரெக்சிட்டுக்கு பின்னரான வர்த்தக உடன்படிக்கை சட்டமாக கைச்சாத்தான நிலையில் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த புதன்கிழமை பிரிட்டன் பாராளுமன்றம் விரைவாகச் செயற்பட்டு ஒப்புதல் அளித்தது. கிறிஸ்மஸ் தினத்தன்றே இரு தரப்புக்கும் இடையே வர்த்தக உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 2016ம் ஆண்டு அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பில் உறுதியானது. ஆனால் அது தொடர்பான நடைமுறைகளை செய்து முடிப்பதில் இழுபறி நிலவியது. 

கடைசியில் கடந்த ஜனவரி 31ம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது.

இப்போது அந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்து விட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாவது எலிசபெத் தனது ஒப்புதலை வழங்கி விட்டதால் அது சட்டமாகி உள்ளது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை மற்றும் சுங்க அமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதோடு, இந்த ஒப்பந்தம் பொருட்களுக்கான சுங்க வரியை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமைகிறது.

மசோதாவை நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். 

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த மாபெரும் நாட்டின் தலை எழுத்து இனி நம்கைகளில் உறுதியாக உள்ளது” என குறிப்பிட்டார்.

ஆனால் அவரது அரசியல் எதிரிகள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து இருந்தபோது இருந்ததை விட நிலைமை இன்னும் மோசமாகி விடும் என எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்தின் வர்த்தக ஒப்பந்தம் சட்டமாகி விட்டதால், ஐரோப்பிய கூட்டமைப்புடன் அந்த நாடு கூடுதல் வரியின்றி வர்த்தகம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment