மேச்சல் தரை, தொல்பொருள் ஆரம்ப திட்டத்திற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிறார் பிள்ளையான் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

மேச்சல் தரை, தொல்பொருள் ஆரம்ப திட்டத்திற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிறார் பிள்ளையான்

மட்டக்களப்பு மேச்சல் தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016, 17ம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்மைப்பினர். இவர்கள் வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தால் எடுத்த பணிதான் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொல்பொருள் என்பது பொதுவானது இது பாதுகாக்கப்படவேண்டியது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இருந்தால் பாதுகாக்கப்படும். ஆனால் மக்களுக்கான பிரச்சனை என்றால் அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி தீர்த்து வைக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது.

அது போன்று மேச்சல் தரை என்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையிலே கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டு செல்ல முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன்.

அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேசியிருக்கின்றேன். இந்த விடயத்தை விரைவாக முடித்து சுமூகநிலைக்கு கொண்டு வந்து பாரம்பரியமான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்போம் என நான் நம்புகின்றேன். இந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்லம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு மேச்சல் தரைக்கு அன்றுதான் வந்துள்ளார். அவர் பிள்ளையான், வியாழேந்திரன் என்ன செய்கின்றார்கள் என பேசுவது மிக வேடிக்கையானது.

எனவே நான் அவரிடம் கேட்கின்றேன் நீங்கள் 20 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள். வன்னி மாவட்டத்தில் நீங்கள் செய்த பணி என்ன ? என்னத்துக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என எனக்கு தெரியவில்லை? இந்த வன்னி மாவட்டத்தில் பல ஏழைகள் உட்பட பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை நீங்கள் தீர்த்துவைக்கவும். எங்கள் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைக்கின்றோம்.

அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேசவேண்டிய தேவைகிடையாது. எங்களுடைய மக்களை இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை காப்பாற்றி முன்னுக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு, கடமை எங்களுக்கிருக்கின்றது. ஆகவே நாங்கள் தலைமை ஏற்றுச் செய்வோம். அரசாங்கத்துடன் பேசுவோம்.

நீங்கள் சொல்லுவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டு வெளியேறுகின்ற நிலைமை வராது என நம்புகின்றேன். அதேவேளை இது தொடர்பாக இப்போது வந்த புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நான் இன்று இருக்கின்றேன் என்பதற்காக என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்துக்கு பொருந்தாத விடயம் என்றார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment