அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கினார் - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கினார்

(செ.தேன்மொழி) 

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அங்கொட, அவிசாவளை மற்றும் கொஸ்லந்த ஆகிய பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும், 18 ரி 56 துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இந்நாட்டிலுருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும், பிரபல போதைப் பொருள் கடத்தல் காரரான அங்கொட லொக்காவின் உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் அங்கொட லொக்காவின் உத்தரவுக்கமைய குற்றச் செயற்பாடுகளை செய்துள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, அவிசாவளை பகுதியில் இரண்டு வாள்கள், உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுடன் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரும் பல குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, கொஸ்லந்த பகுதியில் பாதுகாப்பு வனப்பகுதி ஒன்றில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad