ஜனாஸா எரிப்பு விவகாரமாக தனது செயற்பாடுகளை விளக்குகிறது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

ஜனாஸா எரிப்பு விவகாரமாக தனது செயற்பாடுகளை விளக்குகிறது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது தொடரான செயற்பாடுகள் மற்றும் முயற்சிகளை தெளிபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் உலமா சபை விடுத்துள்ள அறிக்கை வருமாறு, கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏனைய அமைப்புகளோடு சேர்ந்து முன்வைப்பதில் முன்னின்று உழைத்ததை அனைவரும் அறிவர். அந்தவகையில் எமது வேண்டுகோள் கவனத்திற் கொள்ளப்பட்டு, தகனமும் அடக்கமும் என்ற, இருவிதமான அனுமதிகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் பின்னர், மீண்டும் அது தகனம் மட்டும் என்ற அடிப்படையில் அரச வர்த்தமானியில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, துறைசார்ந்தோர், சிவில் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் தொடர்ந்து உச்சகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்

1. 24.03.2020 ஜனாதிபதி, பிரதமர், கெரோனா பாதுகாப்புப் பிரிவு ஆகிய தரப்பினருக்கு உலக சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அமுல் படுத்த வேண்டி ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


2. 31.03.2020 ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், கொரோனா பாதுகாப்புப் பிரிவின் தலைமையகம் மற்றும் டாக்டர் அனில் ஜயசிங்க முதலானோருக்கு மற்றுமொரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.


3. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை இராணுவத் தலைமையகத்தில் நடத்தியது.

4. 31.03.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு, சுகாதார அமைச்சர் திரு பவித்ரா வன்னிஆரச்சி அவர்களுடன், கொவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை சுகாதார அமைச்சில் நடத்தியது.

5. 01.04.2020 அன்று தகனம் தொடர்பிலான அதிருப்தியைத் தெரிவித்து ஓர் ஊடக அறிக்கையை ஜம்இய்யா வெளியிட்டது.



6. 02.04.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் ஜனாசா தொடர்பான சமகால பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு விஞ்ஞான பூர்வமாக அறிவிப்பது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுதல் வழங்குவது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

7. 22.04.2020 ஆம் திகதி தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயம் என்பதை உறுதிப்படுத்தி ஒரு பத்வா ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டது.


8. 07.05.2020 சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.



9. 10.05.2020 சுகாதார அமைச்சருக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டி ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.


10. 05.06.2020 மரணித்தவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தகனம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பதும் அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதும் பல ஆவணங்களை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டது.


11. 10.11.2020 கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தை கண்டறிய அதிகாரிகளுடன் சேர்ந்து மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்யப்பட்டது.

12. 24.11.2020 தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜிதில் ஜனாசா சம்பந்தமாக முஸ்லிம் அமைப்புக்களுடனான விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.

13. 10.12.2020 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முஸ்லிம்களது ஜனாஸாக்களை தகனம் செய்ய மார்க்க ரீதியான எந்த அனுமதியும் கிடையாது என்பதை கூறி முஸ்லிம்களது ஜனாஸாக்களை அடக்கும் உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சேர்ந்து, இவ்விவகாரமாக சிவில் அமைப்பினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பல தரப்பினரும் தம்மாலான முயற்சிகளில் இன்று வரை தொடர்ந்தேர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். எமது இந்த முயற்சிகளை அல்லாஹ் வீணாக்கப்போவதில்லை என நாம் உறுதியாக நம்புகிறோம். “இன்ஷா அல்லாஹ்” இம்முயற்சிகள் வெற்றி பெற முஸ்லிம்கள் பொறுமையை கடைபிடித்து துஆக்களில், சுன்னத்தான நோன்புகளில், ஸதகா தானதர்மங்களில் குறிப்பாக வணக்க வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு ஜம்இய்யா பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது. வல்ல அல்லாஹ் இந்நோயை விட்டும் சகலரையும் பாதுகாத்து நம் அனைவர்களுக்கும் நல்லருள்பாளிப்பானாக!

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment