மருதனார் மட சந்தை எம்முடன் நேரடித் தொடர்புடையது - மக்கள் விழிப்பு, சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் - கொவிட் சோதனைக்கு நானும் உட்பட்டேன், எறும்பு கடித்ததைப் போலவே இருந்தது : தவிசாளர் நிரோஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

மருதனார் மட சந்தை எம்முடன் நேரடித் தொடர்புடையது - மக்கள் விழிப்பு, சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் - கொவிட் சோதனைக்கு நானும் உட்பட்டேன், எறும்பு கடித்ததைப் போலவே இருந்தது : தவிசாளர் நிரோஷ்

வலி கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார் மடம் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வலி கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

எமது வலிகாமம் கிழக்கில் இருந்து பெருந்தொகையான விவசாய உற்பத்திப் பொருட்கள் மருதனார் மடம் சந்தைக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. எமது பிரதேச சபையின் எல்லைப்பகுதியே மருதனார் மடம். 

வலி கிழக்கில் 18 ஆயிரம் விவசாயிகள் உள்ள நிலையில் அவர்களில் அதிகளவானோர் சந்தைத் தேவைக்கு மருதனார் மட சந்தையுடன் நேரடி தொடர்புபட்டுள்ளனர். இதனால் வலிகாமம் கிழக்குப் பகுதி மக்கள் உயர்ந்த அளவில் சமூகப் பொறுப்பினை கொண்டு செயற்பட்டால் மட்டுமே தம்மையும் ஏனையோரையும் பாதுகாக்க முடியும்.

தற்போது வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் மருதனார் மடம் சந்தையுடன் தொடர்புபட்ட 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

எமது பிரதேச மக்களில் பலர் மருதனார் மடச் சந்தையுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில் நிலைமை சிக்கலடைந்தால் ஒத்துழைப்புடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கோப்பாய் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரியுடன் பேசியுள்ளேன். எதிர்வரும் சுகாதாரத்துறை முடிவுகளின் அடிப்படையில் எமது பிரதேச சபை தொழிற்படும்.

சந்தையுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிவது கடினமான பணியாகும். வியாபாரிகளை இலகுவில் கண்டறிய முடியுமாயினும் சந்தைக்கு விற்பனைப் பொருட்களை விற்க வாங்கச் சென்று திரும்பியவர்களை அடையாளப்படுத்துவது சவாலான பணியாகும். அவ்வாறு தொடர்புபட்டவர்கள் முதலில் கிராம சேவகர்களிடம் தங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். 

அயலில் எவராவது தம்மை வெளிக்காட்டாது இருப்பார்கள் ஆயின் அதுபற்றி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு நேரடியாக அறிவிக்க முடியும். பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும் போதும் அது சுகாதாரத் தரப்பினருக்குப் பரிமாறப்படும்.

ஏலவே சுகாதார அதிகாரிகள் எழுமாறாக தொற்றுப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு சகல வழிகளிலும் நிறுவனங்கள், அதிகாரிகள், மக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

கொவிட் சோதனைக்கு நானும் உட்பட்டேன். அது ஒன்றும் கஸ்டமாது அல்ல. வலி கிடையாது. சாதாரணமாக எறும்பு கடித்ததைப் போலவே இருந்தது. எனவே யாரும் அச்சம், அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது. எனவே நாம் சமூக ப்பொறுப்புணர்வை நிலைநிறுத்தி செயற்படுவோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment