(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொவிட் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொள்வதாக இருந்தால் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் ஏன் அனுமதிக்காமல் இருக்கின்றது?. அத்துடன் கொவிட் தொற்று இல்லாத எத்தனை முஸ்லிம்களின் சடலங்களை எரித்தீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் உலக சுகாதார அமைப்பின் தீர்மானத்துக்கமையவே மேற்கொள்வதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
கொவிட் காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யவும் முடியும் அடக்கம் செய்யவும் முடியும் என உலக சுகாதார அமைப்பு தெளிவாக அறிவித்திருக்கின்றது. அப்படி இருக்கும்போது கொவிட் காரணமாக மரணிக்கும் முஸ்லிம் மதத்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் கோரும்போது அதற்கு ஏன் இதுவரை அனுமதி வழங்காமல் இருக்க வேண்டும்? இது எமது நாட்டு முஸ்லிம்களின் மத, கலாசார பிரச்சினை. அவர்களின் மத உரிமைக்கு இடமளிக்க வேண்டும்.
இது தொடர்பாக இந்த மாத ஆரம்பத்தில் இந்த சபையில் நான் கேட்டபோது, இது தொடர்பாக ஆராய விசேட வைத்தியர் குழு நியமித்திருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அப்படியாயின் அந்த வைத்தியர் குழுவின் தீர்மானம் என்ன?
அதேபோன்று கொவிட் தொற்றுக்கு ஆளாகாத நிலையில் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் சடலங்களை எரித்தீர்கள் என தெரிவிக்க முடியுமா? அதன் எண்ணிக்கையை என்னால் தெரிவிக்க முடியும்.
அத்துடன் கொவிட் காரணமாக மரணிப்பவர்களை 194 நாடுகளில் அடக்கம் செய்கின்றன. அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது எமது நாடு மாத்திரம் எரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது. கொவிட் பிரச்சினையை தேர்தலுக்காக இன, மத வாதத்துக்காக சம்பந்தப்படுத்தினார்கள். இதுமிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதனால் இப்போவதாவது இஸ்லாமியர்களின் மத உரிமையை பாதுகாக்கும் வகையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.
மேலும் கொவிட் காரணமாக மரணிப்பவர்களை அடக்குவதால் ஆபத்து இருப்பதாக விசேட வைத்தியர் குழு தெரிவிப்பதாக இருந்தால், அந்த அறிவிப்பை வெளிப்படுத்துங்கள். அவ்வாறு இல்லாமல் அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் மிகவும் தேவையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment