உடல்களை தகனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - மகஜரையும் பெற்றுக் கொண்டார் சுகாதார அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

உடல்களை தகனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - மகஜரையும் பெற்றுக் கொண்டார் சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் மரணங்களின் போது உடல்களை தகனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்குகள் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். 

மேற்படி எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டோர் நேற்றைய தினம் (28) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அவர்கள் அது சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி செயலக முன்றலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் கையளித்துள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில் தேசிய அமைப்புகள் சம்மேளனம், சிங்கள ராவய, தேசிய அமைப்புக்களின் ஒன்றியம், சிங்ஹள அப்பி, சிங்களம் மற்றும் பௌத்த தகவல் கேந்திரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதனை அடுத்து வேறு ஒரு தேவைக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்திருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார். அச்சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதியமைச்சர் அலி சப்ரி கொரோனா வைரஸ் மரணங்களை தகனம் செய்வதற்கு எதிரான சட்டங்களை கொண்டு வர முயற்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் சில நிபந்தனைகளின் கீழ் இடமளிக்க வேண்டுமென அமரபுர மற்றும் ராமான்ய பௌத்த பீடங்களில் உப குழுக்கள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த சடலங்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் மதத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளதாக யாழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment