அமைச்சர் விமல் வீரவன்சவின் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் நாளைய தினம் அங்குரார்ப்பணம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

அமைச்சர் விமல் வீரவன்சவின் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் நாளைய தினம் அங்குரார்ப்பணம்

(நா.தனுஜா) 

உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவு செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தி மேலும் இலகுபடுத்தும் நோக்கில் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகார சபையினால் 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற புதிய செயற்திட்டமொன்று நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. மேற்படி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இது 

குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று திங்கட்கிழமை குறித்த அதிகார சபையினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அதில் கலந்துகொண்டு, குறித்த செயற்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சரியான சந்தையைத் தெரிவு செய்வதிலும் உற்பத்திகளை அங்கு கொண்டுபோய் சேர்ப்பதிலும் நீண்ட காலமாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகார சபை 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற முக்கிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்திருக்கிறது.

உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவு செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இச்செயற்திட்டத்தின் கீழ் முறைமைப்படுத்தப்படுவதோடு இலகுபடுத்தப்படவுள்ளன. 

'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. 

தேசிய விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் தொடர்பான தகவல்களைத் தற்போது சேகரித்து வருகின்றனர். 

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தக் கூடிய வகையிலான இணையப்பக்கமொன்று உருவாக்கப்படவுள்ளது.

அதேபோன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்திற்கான கொள்வனவு நிலையங்களை அமைப்பதற்கான இயலுமையுள்ள தனியார் முதலீட்டாளர்கள் தொடர்பிலும் மதிப்பீடுசெய்து வருகின்றோம், எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment