சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை செயற்பாட்டாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை

சவுதி அரேபியாவில்  31 வயதான பெண்ணுரிமை ஆர்வலர்  லுஜைன் அல் ஹத்லுல்லூ ஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“தம்மை தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தீர்ப்பைப் பார்த்து அவர் அழுதார்” என்று அவரது சகோதரர் வலீத் அல் ஹத்லுல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். 

“சவூதி நீதித் துறை மீது எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபோதும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லுஜைன் அல் ஹத்லுல்லூ. 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை கடந்த 2018ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கிய ஒரு சில வாரங்களுக்கு முன்பு லுஜைன் அல் ஹத்லுல்லூ  கைது செய்யப்பட்டார்.

இவர் மீது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், சவுதி அரேபியாவுக்கு விரோதமான அமைப்புடன் தொடர்பு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

லுஜைன் அல் ஹத்லுல்லூ கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சவுதி அரேபியா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் சவுதி அரேபிய அரசு அதனை பொருட்படுத்தாமல் அவரை சிறையில் அடைத்தது.

ரியாத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் லுஜைன் அல் ஹத்லுல்லூ மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், பின்னர் அந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று (29) பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதன்படி லுஜைன் அல் ஹத்லுல்லூக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறையிலிருந்த 2 ஆண்டுகள் 10 மாதங்களை கழித்து எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment