கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம் சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம் சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி

கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் இது நடந்தது.

சூசன் மோர் என்கிற அந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 'இந்தியானா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தமக்கு சிகிச்சை அளிக்கும்படி யாசிக்க வேண்டியிருந்தது என்று கூறினார் அவர்.

சூசன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த இண்டியானாபொலிஸ் மருத்துவமனை, பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை, தாங்கள் மிக முக்கிய பிரச்சனையாக கருதுவதாகவும், ஆனால் ஒரு குறிப்பிட்ட நோயாளியைப் பற்றி எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. வெள்ளை இன மக்களை விட, கருப்பின மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தான் ஒரு கருப்பினப் பெண் என்பதால் தனக்கு முறையாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என, சூசன் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரைக் குற்றம் சாட்டினார்.

சூசன் மோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வேறு ஒரு உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சூசன் மோர் கடந்த டிசம்பர் 4ம் திகதி, தன் வலி குறித்தும், தன் வலியை மருத்துவர் எப்படி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதையும் ஃபேஸ்புக்கில் ஒரு காணொளி மூலம் கூறியிருந்தார். அப்பதிவில், தனக்கு சிகிச்சையளித்தது ஒரு வெள்ளை இன மருத்துவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சூசன் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டே கண்ணீருடன் இந்த காணொளிப் பதிவைப் பதிவு செய்திருந்தார்.

"என் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்று அந்த மருத்துவர் பார்க்கவில்லை. எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர், என்னைத் தொடவே இல்லை. என் உடலை பரிசோதிக்கவில்லை. நான் எப்படி உணர்கிறேன் என உங்களால் கூற முடியாது என அந்த மருத்துவரிடம் கூறினேன்" என தன் பதிவில் தெரிவித்துள்ளார் சூசன்.

சூசன் மோர் தன் 19 வயது மகன் ஹென்றி உடனும், தன் வயதான பெற்றோர்களுடனும் வாழ்ந்து வந்தார் என கோ ஃபண்ட் மீ என்கிற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு சூசனின் பெற்றோர்கள், டிமென்சியா என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சுகாதாரத் துறையில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும், இன பாகுபாடுகளையும் குறைக்க வேண்டும் என்று பாடுபடுகிற அமைப்பு என்ற முறையில், பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமான, முக்கிய பிரச்சனையாகப் பார்க்கிறோம். எல்லா குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கிறோம்" என மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

'இப்படித்தான் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள்'
கடந்த நவம்பர் 29ம் திகதி சூசனுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி எடுத்த படி, தீவிர காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தான் ஒரு மருத்துவராக இருந்த போதும், தனக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற போராட வேண்டி இருந்தது எனக் கூறினார் சூசன்.

தனக்கு ஆன்டி வைரஸ் மருந்தான ரெம்டிசிவிர் கொடுக்குமாறு, சிகிச்சை அளித்தவர்களிடம் மன்றாட வேண்டி இருந்தது. தன் மார்புப் பகுதியை ஸ்கேன் செய்யவும் இதேபோல கெஞ்ச வேண்டி இருந்தது என சூசன் குறிப்பிட்டிருக்கிறார்.

சூசனுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், நீங்கள் ரெம்டிசிவிர் மருந்தைப் பெற தகுதியற்றவர் என்றும், நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார்.

நான் வலியில் துடித்துக் கொண்டிருந்தேன். நான் ஏதோ போதை பொருளுக்கு அடிமையானவள் போல, எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்னை உணர வைத்தார். நான் ஒரு மருத்துவர் என்பது அவருக்குத் தெரியும். நான் போதைப் பொருட்களைப் பயன்படுத்தமாட்டேன். இப்படித்தான் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள் என தன் ஃபேஸ்புக் காணொளியில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

அப்போது சிகிச்சை வழங்கப்பட்டு வந்த, இண்டியானாபொலிஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து, வேறு ஏதாவது மருத்துவமனைக்கு தன்னை மாற்றுமாறு, மருத்துவ வழக்கறிஞர் மூலம் கோரிக்கை வைத்தார். மருத்துவமனையில் இருந்த வெளியேறினாலும், ரத்த அழுத்தம் மற்றும் தீவிர காய்ச்சலால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கருப்பின அமெரிக்க மக்கள், அமெரிக்க சுகாதாரத் துறையில் எதிர்கொள்ளும் பாகுபாட்டைக் குறித்து ஒரு விவாதம் எழுந்திருக்கிறது.

வெள்ளை இன அமெரிக்கர்களை விட, கருப்பின அமெரிக்கர்கள், கொரோனாவால் மூன்று மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு American Journal of Public Health என்கிற சஞ்ஜிகையில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் வெள்ளை இன மக்களை எதிர்கொள்ளும் விதத்துக்கும், கருப்பின மக்களை எதிர்கொள்ளும் விதத்துக்கும் வேறுபாடு இருப்பதாகவும், பாகுபாடு நிலவுவதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment