மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா? சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதா? - அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் வஜிர - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா? சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதா? - அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் வஜிர

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில், உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா? அல்லது அதனைவிடுத்து பொதுமக்களுக்கு அவசியமான அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றவாறான புதிய செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதா? என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில் அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு, போசணை மற்றும் சுகாதார ரீதியான ஏனைய தேவைப்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் அவசியமா என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள், அதனை முன்வைத்த மாகாண சபை அமைச்சர் உள்ளடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேராலும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நாட்டிற்கு பொருத்தமான புதியதொரு செயற்திட்டம் அவசியமாக உள்ளது. இதில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்புடனான தேர்தலா? அல்லது அவர்களுக்கு அவசியமான அடிப்படை மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஆகவே தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கக் கூடிய மாற்று வழியொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று மகாசங்கத் தேரர்களும் வலியுறுத்தியிருக்கின்றார்கள். 

எனினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெறுமாயின், ஒரு வருட காலத்திற்குள் வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொதுவானதும் ஏற்புடையதுமான தேர்தல் முறையொன்றை தயாரித்துக் கொள்ள முடியும் என்றார்.

மேலும் அண்மையில் பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யும் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இது மிகவும் அவதானத்துடன் கையாளப்பட வேண்டிய பிரச்சினையாகும். 

ஏனெனில் அனைத்து சமூகப் பிரிவினருமே தமது மத ரீதியான நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுகின்றார்கள். ஆகவே இவ்விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடியே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment