ஜெனீவா புதிய பிரேரணை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் தெரிவித்துள்ளது என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

ஜெனீவா புதிய பிரேரணை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் தெரிவித்துள்ளது என்ன?

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவது உறுதியானது என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்தப்பின்போதே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்சந்திப்பு தொடர்பில் மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை வலியுறுத்தி இணை அணுசரணை நாடுகள் பிரேணையொன்றைக் கொண்டு வரவுள்ளன. அதனை அந்தச் செயற்பாட்டில் பிரித்தானியாவே பிரதான வகிபாகத்தினை கொண்டிருக்கப்போகின்றது.

அந்த அடிப்படையில் புதிதாக கொண்டுவரப்படும் பிரேரணையானது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிலிருந்து விலகாதவாறும் அதனை நடைமுறைச்சாத்தியமான வகையிலும் வலுவான உள்ளடக்கங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதாக அது அமைந்திருக்க வேண்டும் என்பதோடு காலத்தினை வீணடிக்கின்றதாக இருக்ககூடாது. 

மேலும் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையிலிருந்து விடுபடாதவாறும் அமைய வேண்டும். அதன் ஊடான அழுத்தம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகரிடத்தில் கேட்டுக்கொண்டேன்.

அத்துடன், சிரியா, மியன்மார் போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான விடயங்களில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் சென்று நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. அவ்விதமான பொறிமுறைகள் இலங்கை விடயத்தில் கையாளமுடியுமா என்பது பற்றி பிரித்தானியா சிந்திக்க வேண்டும். அவ்வாறு சாத்தியமாகும் பட்சத்தில் அதனை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

இச்சமயத்தில், எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய பிரேணையொன்றே கொண்டுவரப்படும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆனால் அந்த பிரேணையானது பொறுப்புக்கூறலை வலுவாக வலியுறுத்தும் அதேநேரம், நடைமுறைச்சத்தியமானதாகவும், இலங்கையை தொடர்ச்சியாக அப்பிரேணையில் முன்மொழியப்படும் செயன்முறைக்குள் வைத்திருப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரித்தானியான முழுமையாக தனது ஈடுபாட்டைச் செய்யும் அதேநேரம், ஜெனீவாவில் இந்தப் பிரேரணையை கொண்டுவரவதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யவுள்ள ஏனைய இணை அணுசரணை நாடுகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் பல்வேறு விடயங்கள் தொடாபில் பிரித்தானியா கரிசனை கொண்டிருக்கும் அதேநேரம், இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை அதிபட்சமாக ஜனவரி மாதமளவிலேயே இறுதி செய்யப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் என்று சுமந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment