(இராஜதுரை ஹஷான்)
காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு தேசிய தொடர்பாடல் குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டில் 4,211 கிலோ மீற்றர் யானை வேலி அமைக்கப்பட்டிருந்தும் அவை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால் குறுகிய காலத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.
யானை வேலிகளை பராமரிப்பதற்காக வருடம் ஒன்றுக்கு 86 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றன. இருப்பினும் அதற்கும் பல சவால்கள் தோற்றம் பெறுகின்றன. இதன் காரணமாகவே யானை - மனித மோதலை கட்டுப்படுத்த தேசிய தொடர்பாடல் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய யானை - மனித மோதலில் இந்தியா முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளது. யானை மனித மோதலில் ஏற்படும் நடுத்தர விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனப்பகுதிகளை அண்மித்த அபிவிருத்தி நிர்மாண பணிகளை நிர்மாணிக்க புதிய கொள்கை வகுக்கப்படும்.
அத்துடன் வனப்பகுதிகளை மீளுருவாக்கம் செய்யும் செயற்திட்டங்கள் நாடளாவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment