(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
விசாரணைக்குழு அமைத்து குற்றவாளிகளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பமுடியாது. வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தின் விசாரணைக்குழுவின் அறிக்கை இன்னும் வெளியில் வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கு விரோதமாக கதைப்பவர்களுக்கு பின்னால் குற்றப் புலனாய்வு பிரிவினர் வருகின்றனர். ஆனால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதில்லை.
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் இடம்பெற்று 8 வருடங்கள் ஆகின்ற நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
அதேபோன்று தற்போது மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை திசை திருப்பி அதனை மறைக்க பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
சிறைச்சாலையினால் வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில் கைதிகளுக்கிடையில் சண்டை இடம்பெறுவது காண்பிக்கப்படுகின்றது.
ஆனால் அங்கு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது அனைவரும் தெரிந்த விடயம். துப்பாக்கி பிரயோகத்துக்கு கட்டளையிட்டதாக சிறைச்சாலை உதவி ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார்.
அப்படியெனில், துப்பாக்கி பிரயோகம் நடத்தும் காணொளி எங்கே? அத்துடன் சிறைச்சாலைக்குள் சீசீடிவி இல்லை என உதவி ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் காணொளி எப்படி எடுக்கப்பட்டது. அப்படியாயின் இங்கு இடம்பெற்ற உண்மை சம்பவம் மறைக்கப்பட்டிருக்கின்றது. விசாரணையின் மூலம் உண்மை நிலையை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment