தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 6 பெண்கள் கைது - பின்னணி என்ன ? - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 6 பெண்கள் கைது - பின்னணி என்ன ?

(எம்.எப்.எம்.பஸீர்) 

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதானியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின், அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

அண்மையில், மட்டக்களப்பு விஷேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர். 

அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 21/4 தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என அறிய முடிகின்றது.

இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment