அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய வழக்கில் பத்திரிகையாளர் ருஹோல்லா ஜாம் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
ஈரானைச் சேர்ந்த ருஹோல்லா ஜாம் என்பவர் ‘அமட்நியூஸ்’ என்ற பெயரில் இணையத்தள பத்திரிகையை நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகையில் ஈரான் அரசுக்கு எதிரான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. எனவே ஈரான் அரசு இந்த இணையத்தள பத்திரிகையை முடக்கியது. ஆனாலும் ருஹோல்லா ஜாம் வேறு பெயரில் இணையத்தள பத்திரிகையை தொடங்கி தொடர்ந்து அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டில் ஈரானில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. அந்த சமயத்தில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் ருஹோல்லா ஜாம் தனது இணையத்தள பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.
இதையடுத்து பொய்யான செய்திகள் மூலம் போராட்டத்தை தூண்டியதாக ருஹோல்லா ஜாம் மீது ஈரான் அரசு வழக்கு பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து ருஹோல்லா ஜாம் பிரான்சில் தஞ்சமடைந்தார். எனினும் கடந்த ஆண்டு அவர் ஈராக்குக்கு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் மீதான வழக்கை விசாரித்த ஈரான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இந்த நிலையில், தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிறையில் ருஹோல்லா ஜாம் நேற்று (12) தூக்கிலிடப்பட்டார். இதனிடையே பத்திரிகையாளரை தூக்கிலிடுவதற்காக ஈரானுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment