அன்டிஜன் பரிசோதனைகள் ஜனவரி 5 வரை தொடரும், 315 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு, யார் மீதும் தனிப்பட்ட குரோதம் இல்லை என்கிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

அன்டிஜன் பரிசோதனைகள் ஜனவரி 5 வரை தொடரும், 315 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு, யார் மீதும் தனிப்பட்ட குரோதம் இல்லை என்கிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு செல்லும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கமைய இதுவரையில் 61 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு செல்லும் நபர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

அதற்கமைய மேல் மாகாணத்திலிருந்து வெளியேறப் பயன்படுத்தப்படும் 11 பகுதிகளில் இந்த அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசோதனை செயற்பாடுகளுக்கமைய இதுவரையில் சுமார் 10,000 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது 61 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களின் அண்மையில் பயணித்ததாக கூறப்படும் 315 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாத்திரம் 1359 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அவர்களில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களின் அருகில் பயணித்ததாக கருதப்படும் 36 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த அன்டிஜன் பரிசோதனைகள் யார் மீதும் கொண்ட தனிப்பட்ட குரோதம் காரணமாக மேற்கொள்ளப்படவில்லை. மேல் மாகாணத்திலிருந்து வெளிபிரதேசங்களுக்கு செல்பவர்களினதும் ஏனைய சமூகத்தினரதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலிருந்து வைரஸ் பரவல் ஏனைய பகுதிகளுக்கு பரவலடைந்து அதனூடாக புதிய கொத்தணிகள் உருவாக இடமளிக்கக் கூடாது என்பதன் காரணமாகவே இது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சுகாதார பிரிவினர் அன்டிஜன் பரிசோதனைக்காக அழைப்பு விடுத்தாலோ, சிகிச்சை நிலையம் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கினாலோ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இதேவேளை, சுகாதார பிரிவினர் அல்லது பாதுகாப்பு பிரிவினர் உங்களது விபரங்களை வினவினால் அதற்காக உண்மை விபரங்களை மாத்திரம் தெரிவிக்க வேண்டும். போலியான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment