விமர்சனங்களை பொறுத்துக் கொண்டு சமூக வெற்றிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம் : "20" க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி விளக்கம் ! - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

விமர்சனங்களை பொறுத்துக் கொண்டு சமூக வெற்றிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம் : "20" க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி விளக்கம் !

நூருல் ஹுதா உமர்

நாட்டின் இப்போதைய சூடான செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கும் கோவிட் - 19 தொற்றில் பாதித்து மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் அரசு இனவாதிகளின் கட்டளைக்கு ஏற்ப நடந்து எரிக்க அனுமதி வழங்கி உள்ளது எனும் வாதம் பரவலாக இருக்கும் இந்த சூழ்நிலையில் 20 ம் திருத்த சட்டமூலம் வாக்கெடுப்புக்கு வந்த போது ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 04, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 2) முஸ்லிங்களுக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொள்வதுமில்லை, எரிப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் செய்வதுமில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா வினவிய போது அவர் முன்வைத்த காரணங்களை அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஊடக அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில் கொரோனா தொற்றில் இறந்ததாக அறிவிக்கப்படும் முஸ்லிம் சகோதர்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போது ஒவ்வொரு முஸ்லிமின் ஆத்மாவும் எவ்வளவு கஷ்டத்தை சந்திக்கும் என்பது சொல்லில் வடிக்க முடியாது. அரசியல், பட்டம், பதவிகள், எல்லாமே மக்களின் நன்மைக்கே. மக்களுக்கு ஒரு கஷ்டம் எனும் போது சமூகம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது கடந்த காலங்களில் பதவிகளை தூக்கிவீசிவிட்டு வந்து அந்த அரசின் இறுதி நாள்வரை பதவிகளை பெறாமல் சமூக நலனுக்காக குரல்கொடுத்து பழகியவர்கள் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

20ம் திருத்த சட்டத்தை ஆதரிக்க முன்னர் நாங்கள் வைத்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றே அரசுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினைக்கான தீர்வை பெறவேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களின் மீது வீசப்படும் கடினமான விமர்சனங்களை பொறுத்துக்கொண்டு சமூக வெற்றிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். 

ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தையும் அதன் பின்னணியில் முஸ்லிங்களின் மனோ நிலைகள் பற்றியும் இந்த அரசின் போக்குகளினால் சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து போகும் தன்மைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர், அரசை இயக்கும் அரசின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ போன்றவர்களிடமும் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். 

அதன் பின்பு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கட்டளையிட்டதன் காரணமாக சுகாதார அமைச்சினதிகாரிகள் பல கட்ட நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட தொடங்கினார்கள். அதே போன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் நிலத்தடி நீர் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை உடனடியாக அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்தார்.

பதவி பட்டங்களுக்காக மௌனமாக இருக்கிறார்கள் அல்லது சுகபோகங்களை அனுபவிக்கவே இப்படி இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கண்களை மூடிக்கொண்டு எழுதுவோர் கடந்த நல்லாட்சியில் கூட்டு இராஜினாமா செய்த வரலாறுகளையும், சமூகம் எதிர்நோக்கிய சிக்கல்களின் போது கையாண்ட உத்திகளையும் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும்.

வீதிக்கு இறங்கி நாங்களும் போராடுவதன் ஊடாக சமூகத்தில் நாங்களும் நல்ல பெயரை எடுத்து எங்களை நல்லவர்களாக பிரபல்யப்படுத்த முடியும். அதன் பின்னர் அரசிடம் இது தொடர்பில் எமக்கு ஆதரவாக பேச யாருமில்லாத நிலை உண்டாகும். எனவே தான் எல்லோருமாக போராடி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல சமூக பிரச்சினைகளை தீர்க்க முடியாது போகிவிடும். 

முஸ்லிம் ஜனாஸா நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவினரை சந்தித்து பேசியுள்ளோம். சுகாதார அமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்கள், பௌத்த பீடங்களின் மாநாயக்கர்கள், பௌத்தவாத அமைப்புக்களின் பிரதானிகள், ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் தெளிவுபடுத்தியதுடன் இன்னோரோன்ன பெரும்பான்மை இன, சிறுபான்மை இன கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளோம். அது மாத்திரமின்றி இந்த நாட்டிலுள்ள அதிகமான வெளிநாட்டு தூதரக தூதுவர்கள், உயஸ்தானிகர்கள், உயர் அதிகாரிகள் என பலரையும் சந்தித்து உதவியும் நாடியுள்ளோம்.

இவைகளெல்லாம் அரசியலை முன்னிறுத்தி நாங்கள் செய்யவில்லை. இது இறைவனின் வார்த்தையுடனும் முஸ்லிங்களின் உணர்வுடனும் பிசைந்ததான போராட்டம். இவைகளை ஊடகங்களின் வாயிலாக பிரேக்கிங் நியூஸ் கொடுத்து தெற்கின் பேரினவாத இனவாதிகளை உசுப்பி விட எங்களினால் முடியாது. அந்த ஊடக வெளிச்சம் இப்போதைக்கு எங்களுக்கு தேவையில்லை. இது சமூகத்தின் கடமை. கடமையை பகிரங்கப்படுத்தி எங்களின் முகத்தில் நாங்களே இனவாதிகளை கொண்டு கரிபூச முடியாது.

எங்களின் முயற்சிகளின் பலனாக அரசுக்கு வந்த பல பக்க அழுத்தங்களினால் அரசும் சுகாதார தரப்பும் தங்களின் நிலையிலிருந்து சற்று இறங்கிவந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நல்லது நடக்கும் எனும் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இதிலும் அரசியல் செய்யும் சிலர் இவற்றையெல்லாம் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் சட்டியை உடைக்க சொல்கிறார்கள். அது எங்களால் முடியாது. இது அரசியல் செய்யும் நேரமல்ல ஜனாஸாவை வைத்துக்கொண்டு அடக்க அவதிப்படும் நேரம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் மக்களுக்கு எது சரியாக அமையுமோ அந்த வழியில் தொடரும். ஊடகங்களுக்கு படம் காட்டுவதை விட காரியம் முடியவேண்டியதே இப்போதைய தேவையாக உள்ளது என்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக செயலக வெளியீடு

No comments:

Post a Comment