பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய சிவாச்சாரியர், பூசகர்கள் உட்பட 15 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய சிவாச்சாரியர், பூசகர்கள் உட்பட 15 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் சிவாச்சாரியர், பூசகர்கள், நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபகாரர்கள் என 15 பேர் வரை சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த சிலரால் ஒளிப்படங்களை ஆதாரமாக வைத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இன்று (29) இடம்பெற்ற மாகாண சுகாதார கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் மார்கழி வைகுண்ட ஏகாதசி பட்ஷ திருவிழா இடம்பெற்றது. திருவிழாக் காலங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தேர்த் திருவிழா, தீர்த் திருவிழாவில் பக்தர்கள் முகக் கவசம் அணியாது பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்துகொண்டனர் என்று ஒளிப்படங்களை முன்வைத்து சுட்டிக்காட்டியுள்ள காரைநகரைச் சேர்ந்த சிலர், ஈழத்துச் சிதம்பரத்துக்கு ஏன் அனுமதியளிக்க முடியாதுள்ளது என்று முறையிட்டுள்ளனர்.

அது தொடர்பில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்ற மாகாண சுகாதாரத் துறை கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே சிவாச்சாரியர், பூசகர்கள், நிர்வாகிகள் மற்றும் தேர் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றின் திருவிழா உபகாரர்கள் என 15 பேர் வரை சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிர்வாகி மற்றும் பூசகர் ஆலயத்தில் தங்க அனுமதி கோரியிருந்தனர். அதனால் அவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து நித்திய பூஜை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அடியவர்கள் ஆலய வெளி வீதியில் வழிபாடுகளில் ஈடுபடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் தற்போது ஆலயங்களில் ஒரே நேரத்தில் 50 அடியவர்கள் மட்டுமே வழிபட முடியும்.

No comments:

Post a Comment