வைத்தியர், குடும்பநல உத்தியோகத்தருக்கு தொற்று - திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 115 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

வைத்தியர், குடும்பநல உத்தியோகத்தருக்கு தொற்று - திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 115 பேருக்கு கொரோனா

திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும், மூதூர் வைத்தியசாலை குடும்பநல உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்

கந்தக்காடு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கடமை நிமித்தம் சென்றிருந்தபோது அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இவ்வைத்தியர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

மூதூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் 53 வயதுடைய குடும்பநல உத்தியோகத்தருக்கு நேற்று (26) அன்ரிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் நேற்று (26) வரைக்கும் 97 கொரோனா தொற்றாளர்கள், மூதூர் மற்றும் ஜமாலியா பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 115 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 3,420 பேருக்கு PCR மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் குறிப்பிட்டார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 30,969 பேருக்கு PCR மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment