கொழும்பு வர விமானத்தை தவறவிட்ட ஷஹீட் அப்ரிடி - சுகாதார வழிகாட்டலுக்கு அமைய LPL ஆரம்பமாகவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

கொழும்பு வர விமானத்தை தவறவிட்ட ஷஹீட் அப்ரிடி - சுகாதார வழிகாட்டலுக்கு அமைய LPL ஆரம்பமாகவுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹீட் அப்ரிடி, இலங்கைக்கான தனது விமானத்தை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான ஷஹீட் அப்ரிடி, இம்முறை திட்டமிடப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) ரி20 கிரிக்கெட் தொடரில், காலி கிளேடியேட்டர் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

போட்டித் தொடர், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,

இன்றையதினம், தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர்,
“இன்று காலை கொழும்புக்கான எனது விமானத்தை தவற விட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை, LPL தொடரில் காலி கிளேடியேட்டர் அணியில் பங்கேற்க விரைவில் வருகிறேன். எனது அணியினருடன் சேர ஆவலுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நாளை இலங்கைக்கு வரவுள்ள அவர், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார். அதற்கமைய, ஷஹீட் அப்ரிடி LPL தொடரின் கிளேடியேட்டர் அணிக்கான முதல் சில போட்டிகளைத் தவற விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் தலைவர் அப்ரிடி இல்லாத நிலையில் காலி கிளேடியேட்டர் அணிக்கு, இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ வழிநடத்தவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இத்தொடரை மழுங்கடிக்கச் செய்யம் அனைத்து தடைகளையும் வெற்றி கொண்டு, சுகாதார வழிகாட்டலுக்கு அமைய, எதிர்வரும் வியாழக்கிழமை (26) LPL தொடரை ஆரம்பிக்கவுள்ளதாக, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், LPL மற்றும் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான தொடர்கள் இரண்டும், சுகாதார வழிகாட்டல்களைப் பேணி, நடாத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளின் பங்கேற்புடன் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இதன்போது இவ்விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டித் தொடர், இரசிகர்களின் பங்கேற்பின்றி எதிர்வரும் வியாழக்கிழமை நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வந்து, அம்பாந்தோட்டை ஷங்ரி லா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் இருவர் மற்றும் இந்திய தொலைக்காட்சி அலைவரிசை தொழில்நுட்பவியலாளர் ஒருவர் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள்கொக்கல, லோங் பீச் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment