சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சம்மாந்துறையில் சுற்றிவளைக்கப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சம்மாந்துறையில் சுற்றிவளைக்கப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் அம்பாரை மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளினால் (25) சம்மாந்துறை பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. விற்பனை நிலையங்களை மூடுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் பீடைகொல்லி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.ஏ.ஸனீர் தலைமையிலான குழுவினரே இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இச்சுற்றிவளைப்பில் பாடவிதான உத்தியோகத்தர்களான ஏ.ஜெய்லாப்தீன், ஏ.ஐ.ஏ.பிரோஸ், சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி விவசாய போதனாசிரியரும் வழக்கு செயற்பாடுகளை பொறுப்பேற்று வழிநடத்தும் அதிகாரியுமான ஐ.எல்.எ பெளசுல் அமீன், மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரி.எ. கரீம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

பெரும்போகச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக அனுமதிப்பத்திரமின்றிய சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தனையடுத்து . இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டன.

மேலும் எதிர்வரும் காலத்தில் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படும் பட்சத்தில் 1980ஆம் ஆண்டு 33ஆம் இலக்க பீடைகொல்லி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1994ஆம் ஆண்டு 06ஆம் இலக்க பீடைநாசினிகள் திருத்தச்சட்டம், 2011ஆம் ஆண்டு 31ஆம் இலக்க பீடைகொல்லி திருத்தச்சட்டம் ஆகியவற்றிற்கு அமைவாக வழக்கு தொடரப்படும் என அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.ஸனீர் கூறினார்.

மேலும் விவசாய விற்பனை நிலையமொன்றை நடாத்தி செல்லும்போது ஒவ்வொருவரும் முறையான பயிற்சி சான்றிதழுடன் அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை நிருபர்

No comments:

Post a Comment